சென்னை: தமிழக அமைச்சரவையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் இடம்பெற இருப்பது நல்ல விஷயம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “புதிதாக பொறுப்பேற்ற அனைத்து அமைச்சர்களும் வாழ்த்துகள். அதிலும் தமிழக வரலாற்றில் முதல்முறையாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்று இருப்பது வரவேற்கத்தக்க, நல்ல முன்னுதாரணமான நடவடிக்கை. அதற்காக முதல்வருக்கு எனது பாராட்டுக்கள்.
அதேநேரம் கூட்டாட்சி என்பது வேறு, கூட்டணி ஆட்சி என்பது வேறு. இதை வைத்து மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக எப்படி சொல்ல முடியும்? கூட்டாட்சிக்கும், கூட்டணி ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தவெக அரசின் அமைச்சரவையில் பங்கேற்பார்கள் என முழுமையான நம்புகிறேன். விளிம்புநிலை மக்களுக்காக பாடுபடுகின்ற ஒரு கட்சி விசிக. இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்துவது என்று அக்கட்சியினர் முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதை வரவேற்கிறேன்.
விசிக, திமுக கூட்டணியில் தொடருமா என்பதை திருமாவளவனிடம் தான் கேட்க வேண்டும். இடதுசாரிகள் அமைச்சரவையில் பங்கேற்காது, வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்பதை ஏற்கெனவே தெரிவித்து இருக்கிறோம். அந்த நிலையே தற்போதும் தொடரும்” என்றார் பெ.சண்முகம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறும்போது, “புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துகள். மக்கள் நலத் திட்டங்கள் தொடர வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளர் நலன் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற இருப்பது நல்ல விஷயம். இது ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இடதுசாரிகள் எண்ணங்கள் பூர்த்தியாகும் காலம் தூரத்தில் இல்லை” என்று தெரிவித்தார்.