சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தனியார் பேருந்து நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நகர, புறநகர் பேருந்துகளில் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
முன்பு ரூ.10 ஆக இருந்த கட்டணம், ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவின்றி பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது சட்டவிரோதமாகும்.
அதேநேரம் இந்த கட்டண உயர்வுக்கு எதிராக போக்குவரத்துத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு துறை அதிகாரிகள் தனியார் பேருந்து நிறுவனங்களின் கட்டண உயர்வை திரும்பப் பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.