சென்னை: குறைந்த தொகுதிகளை பெற்றிருந்தாலும், விசிக, தேமுதிகவை காட்டிலும் கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெற்று கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது செல்வாக்கை நிரூபித்துள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறைந்த தொகுதிகளிலும் அதிக வெற்றியைப் பதிவு செய்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்துள்ளன.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டின்போது, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரட்டை இலக்க தொகுதிகளைப் பெற தீவிர முயற்சி மேற்கொண்டன. எனினும், இழுபறிக்குப் பின்னர் இரு கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதற்கு அப்போதே அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 5 இடங்களில், தளி தொகுதியில் ராமச்சந்திரனும், திருத்துறைப்பூண்டியில் மாரிமுத்துவும் வெற்றி பெற்றனர்.
அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பத்மநாபபுரம் தொகுதியில் ஆர்.செல்லசாமியும், கீழ்வேளூரில் லதாவும் வெற்றி வாகை சூடியுள்ளனர். இதன்மூலம் இரு கட்சிகளும் தலா 2 இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளன.
அதேநேரம் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளை பெற்ற விசிக, காட்டுமன்னார் கோயில் (ஜோதி மணி) மற்றும் திண்டிவனம் (வன்னியரசு) ஆகிய 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவோ, பிரேமலதா விஜயகாந்த் (விருத்தாசலம்) பெற்ற வெற்றியின் மூலம் ஒரே ஒரு இடத்துடன் திருப்தி அடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டாலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்து, தங்களது செல்வாக்கை நிரூபித்துள்ளன.