

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பரவூர் தொகுதியில் போட்டியிட்ட கேரள எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வி.டி.சதீஷன் வெற்றி பெற்றார். அவரை கட்டியணைத்து வாழ்த்து சொல்கிறார் நிர்வாகி ஒருவர். படம்: பிடிஐ
திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
கேரள சட்டப்பேரவையில் 140 தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும்(எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்(யுடிஎஃப்) கடும் போட்டி இருந்தது.
மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டன.
இதேபோல் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகள் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் யுடிஎஃப் கூட்டணி 97 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் 63, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22, கேஇசி 7, ஆர்எஸ்பி 3, ஆர்ஜேடி 1, கேஇசி(ஜே) 1 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 97 இடங்களைக் கைப்பற்றியுள்ளதால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இருக்கிறது. கடைசியாக காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி ஆட்சி 2011 முதல் 2016 வரை ஆட்சியில் இருந்தது. அப்போது உம்மன் சாண்டி முதல்வராக இருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி மீண்டும் ஆட்சியில் அமரவுள்ளது.
சதீஷன், சென்னிதலா வெற்றி: கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதலா ஹரிபாட் தொகுதியில் போட்டியிட்டார். அவர் இம்முறை 68,184 வாக்குகள் பெற்று மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீஷன் இம்முறை பரவூர் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அவர் மொத்தம் 78,658 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மார்க்சிஸ்ட்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் 35 இடங்களைக் கைப்பற்றி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் மொத்தம் 85,614 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
3 இடங்களில் பாஜக வெற்றி: இந்தத் தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. திருவனந்தபுரத்தில் உள்ள நெமோன், கழக்கூட்டம், சத்தன்னூர் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. நெமோன் தொகுதியில், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் வெற்றி பெற்றார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான வி. சிவன்குட்டியை 3,590 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மற்றொரு தொகுதியான கழக்கூட்டத்தில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரான வி. முரளீதரனும் வெற்றி பெற்றார். இது திருவனந்தபுரம் பகுதியில் பாஜக அடைந்த மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியாக அமைந்தது.
50 ஆண்டுக்குப் பின்... 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறும்.
1977 முதல் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் அரசு இருந்து வந்தது. 2011-ல் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்த்திய திரிணமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். அதன் பின்னர் அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதேபோல, திரிபுராவை ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும், 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவிடம் தோல்வி கண்டு ஆட்சியை இழந்தது.
தற்போதைய நிலையில் கேரளாவில் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியை இழந்தது.
வி.டி.சதீஷன் அடுத்த முதல்வர்?- கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரவுள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களாக வி.டி.சதீஷன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால், சசி தரூர் ஆகியோர் உள்ளனர். இதில் வி.டி.சதீஷன், ரமேஷ் சென்னிதலா ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகியுள்ளனர்.
முதல்வர் பதவிக்கு போட்டியாக 4 பேர் இருந்தபோதிலும் வி.டி.சதீஷன் இந்தப் போட்டியில் முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மேலிடத்தில் வி.டி.சதீஷனுக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் அவரே முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.