திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரப் பயணங்களுக்கு தயாராகி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் பெ.சண்முகம், சேலத்தில் நேற்று தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து இன்று (ஏப்.3) கோவையிலும், நாளை கடலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளும் அவர், ஏப்.5, 6-ம் தேதிகளில் சென்னையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிடும் பழனி, கந்தர்வக்கோட்டை, கீழ்வேளூர் தொகுதிகளில் வாக்கு சேகரிக்கவுள்ளார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் சுற்றுப் பயணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் தேர்தல் சுற்றுப் பயணத் திட்டமும் நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் ஏப்.13-ம் தேதி பரப்புரையை தொடங்கும் டி.ராஜா, ஏப்.14-ல் சைதாப்பேட்டை, சேப்பாக்கம், கொளத்தூர், திருவொற்றியூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
தொடர்ந்து 15-ம் தேதி வேலூர் குடியாத்தம், கே.வி.குப்பத்திலும், 16-ம் தேதி கடலூர் காட்டுமன்னார்கோவிலிலும் 17-ம் தேதி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர் தொகுதிகளிலும் டி.ராஜா பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதேபோல் கட்சியின் தேசியச் செயலாளர் ராமகிருஷ்ண பாண்டா 12-ம் தேதி தளி தொகுதியிலும், 13-ம் தேதி திருப்பூரிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பவானிசாகர் தொகுதியில் இன்றும் (ஏப்.3), நாளை ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் பிரச்சாரம் செய்கிறார்.