சென்னை: துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி தலைவரின் பிரதிநிதியை சேர்ப்பதால், ஆளுநரின் பிரதிநிதியை நீக்கி விடலாம் என்று தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் கூறியுள்ளது.
இதுகுறித்து அதன் பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் வெளியிட்ட அறிக்கை: பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஆளுநர், யுஜிசி தலைவர், தமிழக அரசு, பல்கலைக்கழக சிண்டிகேட் ஆகிய 4 தரப்பின் பிரதிநிதிகள் தலா ஒருவர் இடம்பெற வேண்டும் என ஆளுநர் முன்மொழிந்துள்ளார்.
இதில் ஆளுநரின் பிரதிநிதி, யுஜிசி தலைவரின் பிரதிநிதி என மத்திய அரசு பிரதிநிதிகள் இருவரும், மாநில அரசின் பிரதிநிதி ஒருவரும் உள்ளனர். தேடுதல் குழுவில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் சம அளவில் இருப்பதுதான் கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதாகும்.
எனவே, யுஜிசி விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான ஏற்பாடாக அதன் தலைவர் பிரதிநிதியை அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் புதிதாக சேர்க்கலாம்.
அதேபோல, ஆளுநரின் பிரதிநிதி இருக்க வேண்டும் என யுஜிசி விதிமுறைகள் கூறவில்லை. எனவே, அவரின் பிரதிநிதியை நீக்கிவிடலாம். கூடுதலாக, 4 பல்கலைக்கழக தேடுதல் குழுவில் தமிழக அரசு பிரதிநிதியை இடம்பெறச் செய்யலாம்.
இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள் சமஅளவில் இருப்பார்கள். யுஜிசி விதிமுறையை ஏற்பதாகவும் இருக்கும்.