சென்னை: நீண்டகால பாரம்பரியமிக்க முதல்வர் அலுவலகத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கடந்த மே 10-ம் தேதி ஆட்சியமைத்தது. அதன்பின்னர் அலுவல் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் தற்போது இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமைச் செயலக வளாகத்தில் 2 கட்டிடங்கள் உள்ளன. பிரதான புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள 3 தளங்களில் முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. மற்றொரு கட்டிடம் 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையாகும். இதில் துறை செயலர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக்குறை, வாகன நிறுத்துமிட வசதி குறைபாடு மற்றும் புதிய கட்டிடங்களை அமைப்பதற்கான கட்டுப்பாடுகள் காரணமாக முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதவிர, முதல்வர் அலுவலகத்தை மாற்ற வேண்டுமென ஜோதிட ரீதியாகவும் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் முதல்வர் அலுவலகம் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதல்வர் இருக்கும் இடத்தில்தான் அவரின் தனிச்செயலர்களும் பணிசெய்ய முடியும் என்பதால், அவர்களுக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அலுவலகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக தலைமைச் செயலகத்தை வேறு புதிய இடத்துக்கு மாற்றவும் தவெக அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இடநெருக்கடி காரணமாக திமுக ஆட்சி காலத்தில், 2010-ம் ஆண்டு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு அதிமுக ஆட்சிக் காலத்தில், அந்தக் கட்டிடம் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு, தலைமைச் செயலகம் மீண்டும் பழைய இடத்துக்கே மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.