பாமக தலைவர் அன்புமணி
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மற்றும் 4 புறநகர் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள், நிலப் பயன்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அடுத்த மாதத்துக்கான ஊதியம் வழங்கக்கூட பணமின்றி திவாலானதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
54 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் அடிப்படை செலவுகளுக்கு அரசிடம் உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சிஎம்டிஏ தள்ளப்பட்டது ஏன் ? முந்தைய திமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் ஊழலும்,கொள்ளையும் உச்சத்தை அடைந்திருந்தன.
சிஎம்டிஏவை நிர்வகித்தவர்கள் தங்கள் பங்குக்கு ஊழல் செய்வதற்காக ஒழுங்குமுறை அமைப்பான சிஎம்டிஏவை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள செய்து, அதற்கான ஒப்பந்தங்களின் மூலம் ஊழல் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் தான் சிஎம்டிஏவை ஊதியம் வழங்குவதற்கு கூட நிதி இல்லாத நிலைக்கு தள்ளியுள்ளது.
எனவே, சிஎம்டிஏ அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் யார், யாருக்கு வழங்கப்பட்டன. அவற்றில் ஊழல்கள், முறைகேடுகள் நடந்தனவா என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதேபோல், சிஎம்டிஏ பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்குத் தேவையான நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.