சென்னை: அந்த்யோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கேற்ப உணவு தானியம் வழங்கும் சட்டத்திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது : மதிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை கடந்த ஜூன் 24-ல் வெளியிட்ட தேசிய உணவு பாதுகாப்பு (திருத்தச்) சட்ட வரைவால், தமிழக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இச்சட்ட வரைவு, அந்த் யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருள் உரிமைகளை மாற்ற வகை செய்கிறது. தற்போதைய நடைமுறைப்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரு குடும்பத்துக்கு மாதம் 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.
தற்போதைய திருத்தத்தால், குடும்பத்துக்கு அதிகபட்சம் 35 கிலோ என்ற உச்சவரம்பில் மாதம் 7 கிலோ தானியம் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே இருப்பதால், இத்திருத்தம், மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்கான உணவு தானிய அளவை குறைக்கும்.
தமிழகத்தில் தற்போது 18,64,600 அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகள் உள்ளன. இதன்மூலம் 69,26,983 ஏழைப் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.இக்குடும்பங்கள், மத்திய அரசால் வரையறுக்கப்பட்டுள்ள தகுதி வழிகாட்டுதல்களின்படி, சமூகத்தின் மிகவும் நலிவடைந்த பிரிவினரிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள்.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு குடும்பத்துக்கும் போதிய அளவில் உணவு தானியங்கள் கிடைக்காமல் போய்விடவோ அல்லது பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படவோ கூடாது என்பதற்காகவே, இந்த உரிமைகள் எளிமையானதாகவும், நிபந்தனையற்றதாகவும், குடும்ப அடிப்படையிலானதாகவும் வடிவமைக்கப்பட்டன.
மேலும், தற்போது, தமிழகத்தில் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்காக அரிசி, கோதுமை அல்லது கேழ்வரகு போன்ற 65,261 டன் (MT) உணவு தானியங்கள் மாதந்தோறும் மத்திய அரசால் இலவசமாக ஒதுக்கப்படுகிறது. முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் அமலாகும்போது, இந்த விநியோக அளவு சுமார் 42,040 டன்னாகக் குறைந்துவிடும். இது 70 லட்சம் ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும்.
அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, அவர்களின் அன்றாட மூன்று வேளை உணவுக்கும் ஒரு தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாக விளங்குகிறது.
இதை மாற்றினால், அவர்களுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தி, வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பசியின் பிடிக்கு ஆட்படுத்திவிடும்.
இதனால், தமிழகம் மட்டுமல்லாது, அத்தகைய பிற மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படையும். எனவே மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தற்போதைய நடைமுறையான மாதம் 35 கிலோஉணவு தானியங்கள் வழங்கும் உரிமையைத் தொடர வேண்டும். இவ்வாறு அவர் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.