அமைச்சர் நிர்மல்குமார்
ராமநாதபுரம்: பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க வாய்ப்பில்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் நிர்மல் குமார், மதன்ராஜா, வி.கே.ராஜீவ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
தேவர் நினைவிடம், தேவர் வாழ்ந்த இல்லம், மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வழிகள், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.2.17 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய சாலை, ஹெலிபேட் தளம், அன்னதானக் கூடம் உள்ளிட்ட இடங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். முன்னதாக அமைச்சர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: பசும்பொன்னில் கூட்ட நெரிசலை குறைக்க புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவர் குருபூஜை விழாவில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முதல்வர் விஜய் வருவதற்கு வாய்ப்பில்லை. கூட்டம் இருக்கும் இடங்களில் மக்கள் பாதுகாப்புக்காக முதல்வர் பங்கேற்பதில்லை. அதனால்தான் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிலும் முதல்வர் கலந்துகொள்ளவில்லை.
தேவர் நினைவிடம் அருகே அமைந்துள்ள தியான மண்டபம் பகுதியில் இளைஞர்கள், பெண்கள் அரசு போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவற்றுக்கு தயாராகி படிக்கும் வகையில், நவீன பொது நுாலகம் அமைக்கப்படும். தேவர் நினைவிடத்தில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “இடைத்தேர்தலில் அதிமுக கோட்டையாக இருந்த தாராபுரம் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றோம். இனி வரும் இடைத்தேர்தல்களிலும் இதே முடிவுதான் இருக்கும். அதிமுக, திமுக ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க நினைத்ததாலேயே இந்த வீழ்ச்சி. இனிவரும் அனைத்து தேர்தலிலும் திமுக, அதிமுக, பாஜக ஒன்று சேர்ந்துதான் முதல்வர் விஜய்யை எதிர்க்கும்” என்றார்.