அமைச்சர் நிர்மல் குமார் | கோப்புப் படம்
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க மாட்டார் என அமைச்சர் சி.டிஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரை சின்ன சொக்கிகுளத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் செப்.17-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யவும் கோயிலுக்குள் சிரமமின்றி வந்து செல்வதற்கு வசதியாக கியூஆர் கோடு மூலம் நுழைவு சீட்டு வழங்கவும் முடிவெடுத்துள்ளோம்.
கும்பாபிஷேகத்தன்று கோயிலை சுற்றியுள்ள வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவார்கள் என்பதால், கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யவுள்ளோம். கும்பாபிஷேக விழாவையொட்டி கோயிலை சுற்றியுள்ள இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கும்பாபிஷேகவிழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க வாய்ப்பு இல்லை. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். முதல்வர் வந்தால் கூட்டம் மேலும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டும், அன்றைய தினம் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதாலும், அவர் விழாவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறு இல்லை.
மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் குஜியலியம்பாறை வட்டாட்சியர், தனது சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவர் ஓய்வுபெற 6 மாதங்களே உள்ளன. அவரது சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதோடு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மானியக் கோரிக்கைகளின்போது எதிர்க்கட்சிகள் பேச பேரவைத் தலைவர் வாய்ப்பு வழங்குகிறார்.
பல்கலைக்கழகங்கள் ஆளுநர் மேற்பார்வையிலும், அவரது கட்டுப்பாட்டிலும் உள்ளன. வரும் ஜனவரி மாதத்தில் பல பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பட்டம் வழங்க முடியாமல் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.