தமிழகம்

முதல்வர் விஜய் அக்.13-ல் ஆந்திரா பயணம்: நதிநீர் விவகாரம் தொடர்பாக சந்திரபாபுவை சந்தித்து பேச திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: தென் மாநில நதிநீர் இணைப்பு மற்றும் கிருஷ்ணா நதிநீர் விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, முதல்வர் விஜய் அக்.13-ம் தேதி விஜயவாடாவில் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் ஆந்திரா ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். எனினும், இந்தாண்டு அக்.9-ம் தேதி வரை தமிழகத்துக்கு 2.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. இதனுடன் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் ஆறுகளில் அணை கட்டவும் அந்த மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் பங்கீட்டில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தவும் முதல்வர் விஜய், அக்.13-ம் தேதி விஜயவாடா செல்கிறார். அங்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது கோதாவரி- கிருஷ்ணா - காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் விஜயவாடா உத்சவ் 2.0 நிகழ்ச்சியிலும் விஜய் பங்கேற்பார் என்றும் தெரிகிறது.

இதற்கிடையே கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக 2017 பிப்ரவரியில் அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தண்ணீர் திறக்க வலியுறுத்தினார். அதன்பிறகு நதிநீர் விவகாரத்துக்காக இரு மாநில முதல்வர்களிடையே நடைபெறும் முக்கிய சந்திப்பாக இது அமையவுள்ளது.

முன்னதாக காவிரி நதிநீர் விவகாரம் குறித்து முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகா செல்ல திட்டமிட்டு, பின்னர் அது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT