முதல்வர் விஜய்

 
தமிழகம்

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை

நாளையோடு நிறைவடைகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடுகிறது. காவல் துறை, தீயணைப்புத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதில் அளிக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக.5-ம் தேதி 2026 - 27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அதில், நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.29,863 கோடி, நீர்வளத் துறைக்கு ரூ.9,264 கோடி, வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக்கு ரூ.14,984 கோடி என பல்வேறு துறைகளுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டன.

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடியில் ‘வெற்றி மடிக் கணினி திட்டம்’, தலா ரூ.5 லட்சம் அலகுத் தொகையாக வழங்கும் ‘வெற்றி வீடு திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

ஆக.6-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருதுகள் வழங்கப்படும்.

ரூ.785 கோடியில் 'நீர் மேலாண்மைக்கான ‘துளித் துளித்தண்ணீர் திட்டம்’ செயல் படுத்தப்படும். மகளிருக்கு மானியத்தில் ட்ரோன்கள் வழங்கும் ‘வெற்றி வான்மகள் திட்டம்’, ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ஆக.7-ம் தேதி முதல் 2 பட்ஜெட்கள் மீதான விவாதம் தொடங்கியது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘பட்ஜெட்டில் எந்தவொரு புதிய திட்டமும் இல்லை. முந்தைய திமுக அரசின் திட்டங்கள் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளன’’ என்று குற்றம் சாட்டினார்.

முக்கிய வாக்குறுதிகள் இல்லை: முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இலவச சிலிண்டர்கள் மற்றும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை’’ என்று குற்றம் சாட்டினார்.

பேரவையில் மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கெடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பின்னர் கடந்த 12-ம் தேதி, அமைச்சர்கள் மரிய வில்சன், வினோத் ஆகிய இருவரின் பதிலுரையுடன் பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்தது.

அதன்பின், சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீது கடந்த ஆக.17-ம் தேதி தொடங்கி விவாதம் நடைபெற்று வந்தது. உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த செப்.3-ம் தேதி நடைபெற்றது.

முன்னதாக காவல் துறை, தீயணைப்புத் துறை தொடர்பான 59 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டிருந்தார். அதில் அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக 29,108 கூடுதல் காவல்பணியிடங்கள் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

பின்னர் நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் பேசினர். விவாதத்தின் போது உதயநிதி பேசும்போது, ‘‘ஓராண்டுக்கு முன்பு எங்கள் ஆட்சியைப் பாராட்டி பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இப்போது இடம் மாறி மாற்றி பேசுகிறார்.

எங்கள் ஆட்சியில் போக்சோ குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், அதிக வழக்குகள் பதிவாகின. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை உங்களிடம் இருக்கிறது. தைரியம் இருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

அமைச்சர்கள் பதில்: அதற்கு தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் ஆகியோர் அடுத்தடுத்து பதில் அளித்தனர். இதனால் சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்தது. பழனிசாமி பேசும்போது, ‘‘தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது’’ என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், ஜென்மாஷ்டமி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. கடந்த செப்.3-ம் தேதி நடைபெற்ற விவாதத்தின் போது எம்எல்ஏக்கள் எழுப்பிய பல்வேறு கேள்விக்கு முதல்வர் விஜய் இன்று பதில் அளிக்க உள்ளார். மேலும், கடந்த வியாழக்கிழமை சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், ‘‘அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் அளிக்கிறேன். யாரும் ஓடிவிட கூடாது’’ என்று பேசினார்.

இந்நிலையில், முதல்வர் விஜய் இன்று என்ன பதில் அளிக்க போகிறார் என்ற ஆர்வத்தில் அரசியல் நோக்கர்கள், பொதுமக்கள் உள்ளனர். ஏற்கெனவே முதல்வர் விஜய் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து, ரூ.1,200 கோடியில் புதிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் அமைத்தல், கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுதல், பால் கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்வு, மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிவிப்புகள் விவசாயிகள், மகளிர், பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இன்று முதல்வரின் பதிலுரைக்குப் பிறகு, சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை ஆகிய துறைகள் மீதான அறிவிப்புகள் மற்றும் விவாதம் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தொடர், போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை விவாதம், அறிவிப்பு, அமைச்சர்கள் பதிலுரையுடன் நாளையோடு நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT