தமிழகம்

நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமருடன் முதல்வர் விஜய் பேச்சு

மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது , தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் உட்பட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.

தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் முதல் முறையாக டெல்லிக்கு நேற்று சென்றார். சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் காலை 10 மணிக்கு புறப்பட்டு டெல்லிசென்றார். அதன்பின், தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்ற முதல்வரை தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட மாநில அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு காவல் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இதையடுத்து முதல்வர் விஜய் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மாலை 4 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமரின் புதிய அலுவலகத்துக்குக் காரில் சென்றார். அங்கு முதல்வர் விஜய், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பிரதமர் தனது நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்காக முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையை வழங்க வேண்டும். தமிழகத்தில் வான்வழி அமைப்புமையம் (சிஏபிஎஸ்) அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

தவிர, கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கான பூமி பூஜையை நடத்த உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் அறிவித்தது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் எதிரானது. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கும், நீர்வள ஆணையத்துக்கும் பிரதமர் அறிவுறுத்த வேண்டுமென முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. 2026-ம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது 58 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே, அந்த மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனே விடுவிக்க இலங்கை அரசை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் முதல்வர் விஜய் நேற்று சந்தித்துத் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், ரயில்வே திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசியத் தலைவர்களை முதல்வர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SCROLL FOR NEXT