படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
கரூர்: “திமுகவும் அதிமுகவும் கூட்டு களவாணிகள். அப்படி இல்லையென்று இடைத்தேர்தலில் நிரூபித்து காட்டுங்கள்” என்று கரூரில் தமிழக முதல்வர் விஜய் சவால் விடுத்தார்.
கரூரில் அன்று நடந்தது என்ன?
கரூர் அட்லஸ் கலையரங்க வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் பேசும்போது, “கரூர் துயர சம்பவம் நடந்த நாளன்று போலீஸார் எங்களை அலர்ட் செய்திருக்கலாம் அல்லது கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம். அதற்கான அதிகாரம் அவர்களிடம் இருந்தது. அதையெல்லாம் செய்யாமல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து துயரம் நடந்த இடத்துக்கு போலீஸாரே எங்களை அழைத்துச் சென்றனர். அப்போது அது நாடகம் என்று எனக்குத் தெரியாது. அப்போது அவர்களை நான் நம்பிவிட்டேன். பேசும்போது அவர்களுக்கு நன்றியெல்லாம் கூறினேன்.
இதற்கெல்லாம் யார் காரணம்? யார் சொல்லி இதைச் செய்தார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி மாற்றி செயல்படுங்கள் என்று அறிவுறுத்தி, பிரஷர் செய்தது யார்? கரூர் துயரச் சம்பவத்தில் எனது அக்கா, தங்கைகளின் தங்கப் பிள்ளைகளை இழந்திருக்கிறோம். கள்ளம் கபடமற்ற சிரிப்புடைய மழலைகளை இழந்திருக்கிறோம். அக்கா, தங்கை, அண்ணன், தம்பி உறவுகளை இழந்த என்னை ஏளனமாக பேசுகின்றனர். என் மீது பழியைத் தூக்கி போடுகின்றனர். வலி, வேதனையோடு வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளித்து விட்டான் என்று பேசினார்கள்.
வாய் என்று ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? அன்றைய தினம் இருந்த மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்தார்களா? பிரச்சாரம் செய்த இடத்தை நாங்கள்தான் கொடுத்தோம் என்று ஒரு போலீஸ் அதிகாரி பேட்டி கொடுத்தார். வலி, காயங்களை கொடுத்துவிட்டு பழியையும் என்மீது சுமத்தி, அதில் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்.
சட்டப்பேரவையில் ஸ்டாலின் இதைப் பேசி அங்கு ஓர் அரசியல் செய்கிறார். மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடும் அரசியல்வாதி நான் இல்லை. மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் நான். எனக்காக எல்லாவற்றையும் கொடுத்த மக்களுக்காக எல்லாவற்றையும் இழந்துவிட்டு அரசியலுக்கு வந்தவன். மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வந்தவன்” என்றார் விஜய்.
‘பார்ட்டி ஃபண்ட்’
தொடர்ந்து அரசியல் ரீதியில் பேசிய முதல்வரும் தவெக தலைவருமான விஜய், “நமக்கு வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தகுந்த பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அதுமட்டும் போதாது. எந்தக் காலத்துக்கும் எழவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடியை கொடுக்க வேண்டும். நான் மக்களை விட்டு ஒருபோதும் ஓடமாட்டேன். எனக்கு ‘பணமா? ஜனமா?’ என்று கேட்டால், எனக்கு எனது ஜனம்தான் முக்கியம்.
மக்கள் அமைத்து கொடுத்த நமது அரசை விதவிதமாக குறை சொல்கின்றனர். ஒவ்வொரு துறையிலும் பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் அடிக்கிற கொள்ளையை தீயசக்கியும், தீர்ந்துபோன சக்தியும் மாறி மாறி செய்து கொண்டிருந்தனர். சட்டப்பேரவையில் ஒரு ஹைலைட் காமெடி ‘பார்ட்டி ஃபண்ட்’ என்றுதான் சொன்னேன். சொன்னவுடனேயே ஓட்டம் எடுத்தனர். குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுவென்று இருக்கும். இது எங்க அப்பா பீரோவுக்குள்ள இல்லை என்பது போல இருக்கிறது.
சென்னையில் ஒரு பாலம் கட்ட சாதாரண செலவை விட இரு மடங்கு செலவில் கூடுதலாக வைத்து டெண்டர் விட்டுள்ளனர். அதையெல்லாம் கண்டுபிடித்து ரத்து செய்துள்ளோம். எத்தனை லட்சம், கோடி ஊழல் தோண்ட தோண்ட வெளியே வரும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முகமூடியும் கிழிகிறது. இந்த கதையெல்லாம் விஜய் வெளியே சொல்லிவிடுவான் என்ற பயத்தில் எங்கு திரும்பினாலும் ஒரே கதறல் சத்தம். காதில் இருந்து ரத்தம் வராத குறைதான். ஊழலில் ஊறிப்போனவர்கள் இப்படிதான் இருப்பார்கள்” என்றார் முதல்வர் விஜய்.
தவெக ஆட்சி - நிர்வாகம் எப்படி?
தனது தலைமையிலான தவெக ஆட்சி - நிர்வாக செயல்பாடுகளை பட்டியலிட்ட முதல்வர் விஜய், “லஞ்ச, ஊழலை ஒழிக்க முடியாது. அது ரத்தத்தில் ஊறிப்போய் இருக்கிறது என்று சொன்னவர்கள் ஒவ்வொரு அரசு அலுவலங்களாக சென்று பாருங்கள். ஒரு பைசா ஊழல் இல்லை; லஞ்சமில்லை. வேலையெல்லாம் விரைவாக நடக்கிறது. ‘வேலை நடக்குது. அதைவிட எங்களது மரியாதையும் கிடைக்குது. எங்களை உட்காரவைத்து பேசுகின்றனர்’ என்று ஒரு பெரியவர் சொல்கிறார். அதிகாரிகள் அலைக்கழிப்பது இல்லை. மக்கள் பெருமூச்சு விடுகின்றனர். இதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்? மனசு என்று ஒன்று இருந்தால் இதையெல்லாம் செய்யலாம்.
எல் அண்ட்டி நிறுவனம் ரூ.8,600 கோடியில் மூன்று திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. மூன்று மாவட்டங்களை சேர்ந்த 8,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறுவை சிறப்பு தொகுப்புக்காக ரூ.134 கோடி திட்டம் தீட்டியதன் மூலம் விவசாய பெருமக்களோடு அரசு கூடவே நிற்கும். பெண்கள் பாதுகாப்புக்கு சிங்கப்பெண் சிறப்பு திட்டம். அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் அறிவிக்கப்படும். ‘வாக்குறுதிகள் கொடுத்தது என்னாச்சு?’ என்று கேட்டார்கள். நான் திமுக போன்று ரீல்ஸ் தாய்மாமன் இல்லை; ரியல் தாய்மாமன்” என்றார்.
‘டாக் லெஸ்... ஒர்க் மோர்’
தனது அரசியல் அணுகுமுறை குறித்து விவரித்த முதல்வர் விஜய், “திமுக அரசின் வெள்ளை அறிக்கை குறித்து சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஓட்டை பாத்திரத்தில் நீர் நிரப்பி உள்ளனர். பாத்திரம் காலியாகவே இருக்கிறது. தண்ணீர் என்ன ஆனாது தெரியவில்லை. கடவுளுக்கே வெளிச்சம். பட்டியலிட்டது ஓர் உதாரணம்தான். வருகின்ற காலத்தில் நமது அரசின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்.
‘வாயை திறங்க சிஎம்’ என்கிறார்கள். உங்களது முதல்வரை நெஞ்சில் குத்திவிட்டு வந்தது வேற லெவல். பேசுங்கள் என்கிறீர்கள். பேசினால் எழுந்து ஓடி விடுகிறார்கள்.இனிமேல் சபாநாயகரிடம் சொல்லி கதவுகளை மூடச் சொல்லி பேச வேண்டியதுதான். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டோ போட்டு விட்டார்கள். இதற்கு மேலே பேசினால் மொத்தமாக முடிந்துவிடும்.
நாம் அரசியல் பேசினால் ‘விஜய் எல்லாம் அரசியல் பேசலாமா?’ என்கிறார்கள். சரி நமக்கெதுக்கு வம்பு என்று பேசாமல் இருந்தால், ‘விஜய்க்கு அரசியலே பேச தெரியவில்லை’ என்கிறார்கள். இப்படியே மாறி மாறி பேசுகின்றனர்.
மேகேதாட்டு அணை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் ஏன் தள்ளுபடி செய்தது? ஸ்டாலின் சார் ஒழுங்காக வாதாடாமல் விட்டுவிட்டாரா? இப்படியெல்லாம் கேட்டால்தான் மேகேதாட்டு அணை குறித்து பேசியதாக அர்த்தமா? கர்நாடக மாநில முதல்வர் பேசுகிறார். நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்கிறார்கள். நமது மாநில உரிமையை எங்கு நிலை நிறுத்த வேண்டுமோ அதற்கான வேலையை பார்ப்பதுதான் முக்கியம். அதைவிட்டு சவால் விட்டு பேசிக்கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது.
படம்: ர.செல்வமுத்துகுமார்
பேசிப் பேசி பிரச்னையை வளர்த்துவிட்டு யார் மீதாவது பழியை தூக்கி போட்டுவிட்டு மக்களை அம்போன்னு தெருவில் விட்டுவிடுவது நமது அரசியல் அல்ல. அதை நாம் செய்யவும் போவதில்லை. ‘டாக் லெஸ்... ஒர்க் மோர்’ பாலிசிதான் நம்ம பாலிசி.
சட்டப்பேரவையில் மேகேதாட்டு குறித்து தீர்மானம் கொண்டு வந்தோம். அதை எப்படி கொண்டு செல்ல வேண்டுமோ அதை சரியாக செய்வோம். மத்திய அரசு ‘டி-லிமிட்டேஷன்’ கொண்டு வரபோவதாக தகவல் வருகிறது. யார் எதை கொண்டு வந்தாலும் தமிழகம் அதை ஒப்புக் கொள்ளாது. நமது உரிமையை யாருக்காவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்றார்.
மேலும், “திமுகவும், அதிமுகவும் கூட்டு களவாணிகள். ‘எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை’ என்று இவர்களால் நிரூபிக்க முடியுமா? வரும் இடைத்தேர்தலில் நிரூபித்து காட்டுங்கள்” என்று அவர் சவால் விடுத்தார்.
சட்டென உருக்கமான விஜய், “கரூர் எனது மனதை விட்டு நீங்கவே நீங்காது. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிராக நடந்த சூழ்ச்சியை, சதியை இனிவரும் தலைமுறைக்கு தெரியப்படுத்தவேண்டும். இனிமேல் அரசியல் சதியை, சூழ்ச்சியை யாரும் யோசிக்கக் கூடாது என்பதற்காக தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்” என்றார்.
குதிரை பேரம் முதல் வாஷிங் மெஷின் வரை:
திமுகவின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய விஜய், “திமுக ஆட்சி முடிந்தவுடன் நம்மை பார்த்து சோஃபா, வாஷிங் மெஷின் என்கிறார்கள். அரசியல் வியாபாரம் செய்வதற்காக வெண்டிங் மெஷினே திமுகதான். தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை அடித்து நொறுக்கி உள்ளோம். தேர்தலிலேயே அப்படி வேலை பார்த்தவர்கள். நமக்கு எதற்கு குதிரை, கழுதை, ஓட்டக பேரம் எல்லாம்?
மக்கள் நம் பக்கம் இருக்கும்போது எதற்கு பேரம் எல்லாம். திமுகவில் தோண்ட தோண்ட எவ்வளவு பேர் மாட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை. யாரும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், இது விஜய் ஆட்சி என்று சொல்லுங்கள். ஆட்சி முடிந்தும் முதல்வர் விஜய் எங்கு செல்லவேண்டும், செல்லக் கூடாது என்று திமுக சொல்கிறது.
கண்விழித்து பாருங்கள்... உங்களது ஆட்சி முடிந்து தவெக ஆட்சி வந்து பல நாட்களாகிவிட்டது. உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி தீர்ப்பு கொடுத்தும் திமுக விழித்துக்கொள்ள வேண்டும். திமுகவை திருத்தவும் முடியாது. அவர்களாக திருந்துவார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. எனவே, வரும் இடைத்தேர்தலில் திமுவை நன்றாக வைத்து வெளுத்து விடுங்கள்” என்றார் முதல்வர் விஜய்.
கரூரில் மீண்டும் பாட்டு:
கரூரில் பிரச்சாரத்தின்போது “பாட்டிலுக்கு 10 ரூபா...” என்று செந்தில் பாலாஜியை கிண்டல் செய்து விஜய் பாட்டு பாடினார்.
தற்போது முதல்வரான பின்னர் கரூர் சென்ற விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசியபோது, செந்தில் பாலாஜியை கரூர் கம்பெனி என்று விமர்சனம் செய்ததோடு, அவர் வழக்கில் ஆஜராகாமல் இருப்பதை கிண்டல் செய்யும் வகையில், “ஓடு... ஓடு... வர்றான் பாரு வேட்டைக்காரன்” என்ற அவர் நடித்த திரைப்படத்தின் பாடலை பாடினார்.
அதன்பின், “மற்றொருவர் வெளிநாட்டுக்கே சென்றுவிட்டார்” என்று முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதை விமர்சனம் செய்தார்.