டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் எதிர்ப்புக் காட்டாமல் கலந்து கொண்டதுடன், “மத்திய அரசுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்புத் தருவோம்” என்று அந்தக் கூட்டத்தில் பேசி இருப்பது ஆளும் பாஜக வட்டாரத்தை ஆனந்தப்பட வைத்திருக்கிறது.
கடந்த ஆட்சியில் மத்திய பாஜக அரசுடன் நிதி சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களுக்காக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது திமுக. பாஜக அரசும், கல்விக்கான நிதியை தராமல் நிறுத்தி வைத்தது. பேரிடர் கால நிவாரண நிதியாக திமுக கேட்ட நிதியை தரமறுத்தது. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கான நிதியை தர யோசித்தது. இதனால் எதற்கெடுத்தாலும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கொடிபிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது திமுக.
இப்படியே மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ‘நீயா நானா’ யுத்தம் தொடர்கதையாகிப் போனதால் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்தார் அப்போதைய முதல்வர் ஸ்டாலின். 2024-ம் ஆண்டு ஜூலையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தபோது, “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லை. அந்தளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது மத்திய அரசு ஆத்திரத்தில் இருக்கிறது.
இரண்டு பேரிடர்களை சந்தித்துள்ள தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி கேட்டிருந்தோம். ஆனால், வெறும் 276 கோடியை தந்திருக்கிறார்கள். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நீதி இல்லாத காரணத்தால் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவெடுத்திருக்கிறோம்” என்று சொன்னார் ஸ்டாலின்.
அதன் பிறகும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத நிலையிலும் 2025 மே மாதம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் மறுப்பின்றி கலந்து கொண்டார். இதை விமர்சித்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மூன்றாண்டுகளாக நிதி ஆயோக் கூட்டங்களைப் புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், பல்வேறு துறைகள் சார்ந்த ஊழல்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடப்பதாலேயே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது” என்றார்.
இந்த நிலையில், தங்களின் கொள்கை எதிரி பாஜக என்று சொன்னாலும் ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே அரசியலையும் அரசு நிர்வாகத்தையும் தனித் தனி டிராக்கிலேயே வைத்திருக்கிறார் முதல்வர் விஜய் என்கிறார்கள் தவெக மாநில நிர்வாகிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “பாஜக-வுடன் கொள்கை அளவிலான கூட்டணி எதுவும் கிடையாது என்பதில் தெளிவாகவே இருக்கும் விஜய், அதற்காக எதற்கெடுத்தாலும் பாஜக அரசுடன் மோதிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என நினைக்கிறார். அதனால் அரசியல் கலப்பில்லாத ராஜாங்க அணுகுமுறைகளை மிகவும் கவனத்துடனேயே கையாள்கிறார்.
முதல்வராக பொறுப்பேற்றதுமே தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்களை தேடிப்போய் சந்தித்தார் விஜய். அதன் பிறகுதான் பிரதமரைச் சந்திக்க நாள் குறித்தார். அப்படிச் செய்யாமல், எடுத்ததுமே அவர் பிரதமரைச் சந்திக்கப் போயிருந்தால் அதையும் அரசியலாக்கி இருப்பார்கள்.
அதேபோல், பிரதமரைச் சந்தித்த கையோடு ராகுல், சோனியா உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்திருந்தால் அது மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்குமான சுமுக உறவில் சங்கடத்தை உண்டாக்கலாம் என கணித்தவர், முதல் பயணத்தில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் தவிர்த்தார். விஜய்யின் இந்த அணுகுமுறையானது பாஜக-வுக்கும் பிடித்திருந்தது.
அடுத்தகட்டமாக, இண்டியா கூட்டணிக் கூட்டத்தை திமுக புறக்கணித்ததால் அந்த இடத்தை நிரப்ப தவெக-வை அதில் கலந்துகொள்ள வைக்க காங்கிரஸ் தரப்பில் பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. அதையும் நாசூக்காக தவிர்த்துவிட்டார் விஜய். அதேபோல், தங்களுக்குக் கிடைத்த ராஜ்ய சபா சீட்டையும் காங்கிரஸுக்கு தந்துவிட்டார்.
அப்படியில்லாமல் தவெக-வே போட்டியிட்டிருந்தால் நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தவெக-வும் ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டிய தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கும். தற்போது அதற்கும் இடமில்லாமல் செய்துவிட்ட விஜய், அடுத்த நகர்வாக நிதி ஆயோக் கூட்டத்திலும் கலந்து கொண்டு தமிழகத்தின் தேவைகளை எடுத்துவைத்துவிட்டு திரும்பி இருக்கிறார்.
தனது இந்தப் பயணத்தின் போது குடியரசுத் தலைவரையும் துணை குடியரசுத் தலைவரையும் சந்தித்த விஜய், ராகுல் காந்தி, சோனியா காந்தி, டி.ராஜா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறார். ஆக, எதற்கெடுத்தாலும் மத்திய அரசுக்கு எதிராக சங்கநாதம் எழுப்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதில் தெளிவாக இருக்கும் விஜய், அவர்களின் போக்கிலேயே போய் தமிழகத்துக்குத் தேவையானதை கேட்டுப் பெறுவது என்பதில் தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது” என்றனர்.
எதற்கும் வாய் திறக்காமல் இருக்கிறார் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், மத்திய அரசுடன் விஜய் நல்லுணர்வை பேண விரும்புவதாகவே தெரிகிறது. அவரின் இந்த அணுகுமுறையால் தானோ என்னவோ, பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1000 கோடியை தமிழகத்துக்குத் தந்திருக்கிறது மத்திய அரசு. இப்போதிருக்கும் சூழலில் விஜய்க்கு இத்தகைய அணுகுமுறை அவசியம் தான். ஆனால், இதே ரூட்டில் பயணித்து தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசிடம் தடையின்றி பெற்று விடுவாரா விஜய்? பொறுத்திருந்து பார்ப்போம்.