செய்தியாளர்களிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா.
விழுப்புரம்: “தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக பேசியவதற்கு ‘ஐ ஆம் சாரி’ என ஸ்டாலினை நேரடியாக சந்தித்தபோது முதல்வர் விஜய் கூறியிருக்கிறார். இதேபோல் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்டி தனது உடல்மொழி சைகைக்காக ‘ஐ ஆம் சாரி’ என விஜய் கூறுவதுதான் பிராய்ச்சித்தமாக இருக்கும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: “தமிழகத்தின் கஜானாவை காலி செய்துவிட்டதாக கூறி ஆட்சிக்கு வந்த தவெக, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்போவதாக தெரிவித்துள்ளது.
முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு அருகில் உள்ள பகுதியாக இருக்கலாம். ஆனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும். எனவே, இந்தத் திட்டத்தை தவெக அரசு கைவிட வேண்டும்.
தமிழக சட்டப்பேரவையில் கடைசி இரு நாட்கள் நடைபெற்ற சம்பவம் மிக மோசமானதாக அமைந்துவிட்டது. முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில், காழ்ப்புணர்ச்சியுடன் உடல் சைகை மொழியில் பரப்புரையை முதல்வர் விஜய் மேற்கொண்டுள்ளார். மேடையில் கூட நாகரிகமாக பேச வேண்டும். சட்டப்பேரவையில் மூன்றாம் தர, நான்காம் தரமாக அவர் பேசியது கண்டிக்கத்தக்கது. அமைச்சர்களும் பச்சைப் பொய்யை பேசி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த மிசா எனும் கொடிய சட்டத்தில் கைதாகி, சிறையில் மிகப் பெரிய கொடுமைக்கு ஸ்டாலின் இலக்கானார். சட்டப் பேரவையில் உள்ள நூலகத்தில் சென்று பார்த்தேன். அவசர காலத்தில் நடைபெற்ற கொடுமை குறித்து ஆய்வு செய்ய, நீதிபதி இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையில், சிறையில் எப்படியெல்லாம் ஸ்டாலின் கொடுமைப்படுத்தப்பட்டார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய வழக்கறிஞர் சந்துருவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அரசமைப்பு சட்டத்தின்படி உறுதி மொழி ஏற்றுள்ள முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் முழு பூசணியை சோற்றில் மறைப்பது போன்று வரலாற்றை தவறாக பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஓர் அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படக் கூடாது. சட்டப்பேரவையில் சூடான விவாதம் நடைபெற்றுள்ளது. உடல் மொழி சைகை மூலம் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தியது நியாயம் இல்லை. தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக பேசியவதற்கு ‘ஐ ஆம் சாரி’ என ஸ்டாலினை நேரடியாக சந்தித்தபோது முதல்வர் விஜய் கூறியிருக்கிறார். அதேபோல் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்டி தனது உடல் மொழி சைகைக்காக ‘ஐ ஆம் சாரி’ என விஜய் கூறுவதுதான் பிராய்ச்சித்தமாக இருக்கும்.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடியில் நடைபெற இடைத்தேர்தலில் திமுகவை மனிதநேய மக்கள் கட்சி ஆதரிக்கின்றது. திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு கள பணியாற்றுவோம். மக்களுக்கு நல திட்டங்கள் மூலம் நல்லாட்சி நடத்தாத தவெகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மறைமுகமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய பாஜக அரசு கொண்டு வருகிறது. இதனை தமிழக அரசு ஏற்கக் கூடாது. இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்.
பாஜக அரசு மறைமுகமாக வரக் கூடாது என்பதற்காக தவெக அரசை ஆதரித்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெறவில்லை. தவெக அரசு மேற்கொள்ளக் கூடிய மக்கள் விரோத நடவடிக்கைக்கு இணக்கமாக இருக்க முடியாது என பெ.சண்முகம், மு.வீரபாண்டியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். நாடகம் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணி, நீண்ட காலம் நீடிக்காது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அமலாக்கத் துறை மூலம் பாஜக அரசு மிரட்டி வருவதாக கூறப்படும் நிலையில், நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சமர்பித்த அறிக்கையை பேரவையில் முதல்வர் விஜய் வாசித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸின் பதில் என்ன?
எனவே, புதிய கூட்டணியானது தோல்வியில் முடியும். கொள்கை கோட்பாடுடன் தொடங்கப்பட்ட மக்கள் நல கூட்டணியால் நீடித்து நிலைக்க முடியவில்லை. இதைவிட மோசமான நிலைக்கு புதிய கூட்டணி போகும்.
சட்டப்பேரவையில் ஸ்டாலினை உடல் சைகை மொழியால் விமர்சித்த முதல்வர் விஜய்யை கண்டித்து செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக ஆதரவு கோரினால் பங்கேற்போம்.
சட்டப்பேரவை மரபுகளை பின்பற்றாத முதல்வர் விஜய், கமுக்கமாக லண்டன் பயணம் செல்கிறார்.
மலேசிய, இலங்கை நாடாளுமன்றத்தில் ஆங்கில மொழி கலப்பு இல்லாமல் தமிழர்கள் தமிழில் பேசுகின்றனர். ஆனால், தமிழ் பிறப்பின் தேசமான தமிழகத்தில் இருந்துகொண்டு, தமிழக சட்டப்பேரவையில் தமிழை சரியாக உச்சரிக்காமல், தேவை இல்லாமல் ஆங்கில மொழி கலப்புடன் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேசுவது என்பது தமிழ் வாழ்கிறதா, வீழ்கிறதா என்ற கவலை எழுந்துள்ளது” என்று ஜவாஹிருல்லா கூறினார்.