சென்னை: பணியின்போது உயிரிழந்த 6 காவலர்கள் மற்றும் கோமா நிலையில் உள்ள ஒரு காவலர் என 7 காவலர் குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகை ரூ.5.96 கோடிக்கான ஆணைகளை காவலர் வீரவணக்க நாளையொட்டி, முதல்வர் விஜய் வழங்கினார்.
லடாக்கில் சீனப் படைகள் 1959-ம் ஆண்டு நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 10 வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தைப் போற்றி ஆண்டுதோறும் அக்.21-ம் தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, டிஜிபி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், காவலர் நினைவுச்சின்னம் முன்பு முதல்வர் விஜய் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் மரக்கன்றையும் நட்டு வைத்தார். முன்னதாக, டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், முப்படை அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, தமிழக காவல் துறையில் பணியின் போது உயிரிழந்த 6 காவலர்கள் மற்றும் கோமா நிலையில் உள்ள ஒரு காவலர் என மொத்தம் 7 பேரின் குடும்பங்களுக்கு, அரசின் சம்பளத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக ரூ.5.96 கோடிக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட நாடுமுழுவதும் 154 காவலர்கள், அதிகாரிகள் பணியின்போது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நிகழ்வின்போது, டிஜிபி அறைக்கு முதல்வர் விஜய் சென்றார். அவரை தனது இருக்கையில் அமருமாறு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கேட்டுக் கொண்டார். அதை மறுத்து, டிஜிபியை அவரது இருக்கையிலேயே அமர வைத்த முதல்வர், எதிர் இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் உரையாடினார். உள்துறை செயலர் ஏ.கார்த்திக், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையொட்டி முதல்வர் நேற்று வெளியிட்ட வலைதளப் பதிவில், ‘நாட்டில் அமைதி, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் உயரிய கடமையில் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினருக்கு வீரவணக்கங்கள். இயற்கைப் பேரிடர், விபத்து, குற்றச் சம்பவங்கள் என பல சவால்களை எதிர்கொண்டு, துணிவு, விழிப்புடன் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. கால நேரம் கருதாமல், அயராது உழைத்து, நாட்டின் அரணாகத் திகழும் காவல் துறையினரின் உன்னத பணிகளைப் போற்றிடுவோம்’ என கூறியுள்ளார்.