

சென்னை: குரூப்-2, 2-ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியானது. பல்வேறு பதவிகளில் 846 காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்தத் தேர்வை 4.90 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத் துறை நன்னடத்தை அலுவலர், சார்-பதிவாளர், ஜெயிலர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளில் 43 காலி இடங்களையும், கூட்டுறவு பால் சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறை தணிக்கை ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், பேரூராட்சி செயல்-அலுவலர் உள்ளிட்ட குரூப்-2 ஏ பதவிகளில் 846 காலி இடங்களையும் நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2, 2-ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆக.11-ம் தேதி தொடங்கி செப்.9-ம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்வுக்கு 4 லட்சத்து 89,884 பேர் விண்ணப்பித்தனர். முதல்நிலைத் தேர்வு நவ.1-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குரூப்-2, 2-ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ப. வெங்கடபிரியா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த குரூப்-2, 2-ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நவ.1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவு (ஒடிஆர்) வாயிலாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தத் தேர்வில் பொது அறிவு பகுதியில் 100 கேள்விகளுக்கும் (150 மதிப்பெண்), பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 கேள்விகளுக்கும் (150) விடையளிக்க வேண்டும். மொத்தம் 300 மதிப்பெண். முதல்நிலைத் தேர்வில் இருந்து ‘ஒரு காலி இடத்துக்கு 10 பேர்’ என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் குரூப்-2 மெயின் தேர்வுக்கும், குரூப்-2-ஏ மெயின் தேர்வுக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இறுதியாக, மெயின் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். குரூப்-2, 2-ஏ பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. மெயின் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.