சென்னை: “வீராங்கனை பேபி சஹானா ரவியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவரது வெற்றி தமிழகத்தின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்” என்று முதல்வர் விஜய் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் - கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை பேபி சஹானா ரவியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவரது வெற்றி தமிழகத்தின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் 5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி கடந்த 18-ம் தேதி தொடங்கியது. வரும் 24-ம் தேதி வரை இந்த விளையாட்டு தொடர் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்தியா 11 விளையாட்டுப் பிரிவுகளில் சுமார் 168 வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்குகிறது. கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவில் இருந்து 303 பேர் பங்கேற்றிருந்தனர். அப்போது 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களைக் கைப்பற்றி, பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தை பிடித்து இருந்தது.