சென்னை: ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தாமல் அமல்படுத்துவதை, முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஒரே நாளில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 142-வது கூட்டம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 57-வது கூட்டம் ஆகியவற்றில், இன்று காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 6,000 கன அடி வீதம் 7.776 டிஎம்சி தண்ணீரை கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை வரவேற்று மகிழ்கிறேன்.
கடந்த ஜூலை மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு குறித்த நேரத்துக்கு முறையாக அமல்படுத்தாததால், தமிழகத்தின் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் நலிவடைந்தது.
கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த அலட்சியப் போக்கால், டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதமே திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை நீர், இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில்தான் திறக்கப்பட்டது. இதனால் குறுவை மற்றும் இதர சாகுபடி பயிர்கள் காய்ந்து போகும் தருவாயில் உள்ளன.
எனவே, தமிழக விவசாயிகளுக்கும், விளைப் பயிர்களுக்கும் புத்துணர்வு அளிக்கும் வகையிலான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தற்போதைய உத்தரவையாவது கர்நாடக காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தாமல் அமல்படுத்துவதை, முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும்.
கர்நாடக காங்கிரஸ் அரசால் தமிழக விவசாயிகள் மீண்டுமொரு முறை வஞ்சிக்கப்படுவதை முதல்வர் விஜய் வேடிக்கை பார்க்கக் கூடாது. கூட்டணிப் பாசத்தை விட, விவசாயிகளின் வாழ்வாதாரமே முக்கியம்’ எனத் தெரிவித்துள்ளார்.