

சென்னை: தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம், பனையூரில் இன்று மாலை நடைபெறுகிறது.
முதல்வர் விஜய் தலைமையில் கடந்த ஜூலை 1-ம் தேதி கோவளத்தில் தோழமை கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகியகட்சிகள் பங்கேற்றன.
இந்நிலையில் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இதையொட்டி அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் அடங்கிய குழு தொடர்ந்து, ஆதரவு கட்சியினரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
கூட்டணி பெயர்
இக்கூட்டத்தில், கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்பாளர் தேர்வு என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் தற்போது 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தவெக வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
கம்யூனிஸ்ட்கள் முடிவு
கடந்த முறை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு இந்த முறையும் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் இந்த முறையும் தாங்கள் தவெக தலைமையிலான ஆதரவு கட்சிகளுடனான கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘செப்.9-ல் (இன்று) நடைபெறும் தவெக தோழமைக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது.
தவெக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளோம். தவெக அரசுக்கு எங்களின் ஆதரவு 5 ஆண்டுகளும் தொடருமா? என்பது தவெகவின் நிலைப்பாட்டை பொறுத்தது’’ என தெரிவித்தார்.
அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், செய்தியாளர் களிடம் கூறும்போது, “தவெக தலைமையில் ஆதரவு கட்சிகளுடனான கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக மாநிலக் குழு கூடி விவாதித்தோம்.
அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தவெக கூட்டத்தில் எங்களால் பங்கேற்க இயலாது. தவெகவுக்கு எங்களது ஆதரவு வெளியில் இருந்து தொடரும். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இது நிச்சயமாக தொடரும். அதற்கு முதல்வர் மதச்சார்பின்மை பக்கமும், உழைக்கும் மக்கள் பக்கமும் உறுதியாக நிற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.