சென்னை: தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்(தவெக), 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
தமிழக அரசியல் களத்தில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த இருபெரும் திராவிடக் கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு, கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து புதிய வரலாற்று சாதனையை தவெக படைத்தது. எனினும்,போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைப்பதில் பல்வேறு சிக்கல்களை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் சந்தித்தார். நீண்ட களேபரங்களுக்கு பின்னர், இறுதியில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்வராக விஜய் கடந்த மே 10-ல் பொறுப்பேற்றார்.
9 அமைச்சர்களுடன் தவெக ஆட்சியின் நிர்வாகப் பயணம் தொடங்கியது. அதன்பின் அமைச்சரவை இருமுறை விரிவாக்கம் செய்யப்பட்டு, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மே 13-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 25 அதிமுக எம்எல்ஏ.க்கள் உள்ளிட்டோரின் ஆதரவுடன் 144 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை முதல்வர் விஜய் நிரூபித்தார். தற்போது முதல்வராக விஜய் பொறுப்பேற்று நேற்றுடன் 100 நாள் முடிந்த நிலையில், இந்த ஆட்சியின் குறுகியகால சிறப்பம்சங்களைக் காணலாம்.
முக்கிய அறிவிப்புகள்
முதல்வராக விஜய் பதவியேற்ற முதல் நாளிலேயே, வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, மாவட்டம் தோறும் போதைப் பொருள் தடுப்புப் படை ஆகிய 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தினார். தொடர்ந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, எம்-சாண்ட் உட்பட கட்டுமானம் சார்ந்த கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
இதுதவிர திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் அண்ணனின் சீர் திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம், காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவாக்கம், பயிர்கடன் தள்ளுபடி, 717 டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
திடீர் ஆய்வுகள்
வாரநாட்களில் தினமும் தலைமைச்செயலகம் வந்து காலை முதல் மாலை வரை அங்கேயே இருந்து அலுவல் பணிகளை மேற்கொள்வது முதல்வர் விஜய்யின் பணிஇயல்பாக இருக்கிறது. அத்துடன் வேலையை முடித்துவிட்டு, மாலை வீடு திரும்பும் நேரங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
முதலில் தலைமைச்செயலக வளாகத்தில் தொடங்கி, பின்பு நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, சைதாப்பேட்டையில் உள்ள மாணவர் விடுதியில் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வுகளை மேற்கொண்டார். அங்கு குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வுகளை ஏற்படுத்தினார். அதேபோல், சென்னை கோயம்பேட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், ஒரகடம் சிப்காட், தனியார் தொழிற்சாலைகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பட்ஜெட்
தவெகவின் முதல் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 5, 6-ம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நூறு நாள் வேலை நாட்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்த்தப்படுதல், கர்ப்பிணி பெண்களுக்கான ‘தாய் கேர்’ சேவை மையங்கள், கல்லூரி மாணவர்களுக்கான வெற்றி மடிக்கணினி திட்டம், 10,000 பள்ளிகளில் ‘சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ்’ திட்டம், வெற்றி வீடு திட்டம் மூலம் 70,000 வீடுகள் ரூ.3,500 கோடியில் கட்டப்படுதல், ஏக்கருக்கு ரூ.3,000 உழவு மானியம் உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார நோக்கம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள்
தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் தமிழகத்தில் ரூ.1.02 லட்சம் கோடிக்கும் மேலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1.22 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இதற்காக சென்னையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த முதலீடுகள் சென்னை, காஞ்சிபுரம் மட்டுமின்றி கடலூர், தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட உள்ளன.
மான்டேக் சிங் அலுவாலியா குழு
முன்னதாக, மாநிலத்தின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்பதை வெள்ளை அறிக்கை மூலம் தமிழக அரசு வெளிப்படுத்தியது. இதையடுத்து தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான செயல் திட்டத்தை வகுக்க பொருளாதார அறிஞர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் வருவாய் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 3 மாதங்களில் வழங்கவுள்ள பரிந்துரை அறிக்கையின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தனித் தீர்மானங்கள்
மத்திய அரசு வரிகளின் பகிர்வு மேற்கொள்ளும்போது தமிழகத்துக்கு நியாயமான, உரிய நிதி பகிர்வை வழங்குதல், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் நிகழ்ச்சி துவங்கும் முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடுதல், நீட் தேர்வை ரத்து செய்து விட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துதல், தொகுதி மறுவரையறை செய்யாமல் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கால தாமதம் இன்றி வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தனித்தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகள் முழு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்துவிட்டதைக் குறிக்கும் வகையில், அரசின் சாதனைகளை விளக்கும் 2 சிறப்பு நூல்களை முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ‘மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கம்’ என்ற புத்தகம் ஆகியவற்றில் கடந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், துறைவாரியான சாதனைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் சவால்களைக் கடந்து, தனது முதல் 100 நாட்களில் தவெக அரசு காட்டியுள்ள செயல்திறன் தமிழக அரசியலில் பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.