திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சி யில் பங்கேற்ற பாஜக சிறுபான்மையினரின் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்.
திண்டுக்கல்: “முதல்வர் விஜய் ஆட்சியை தக்க வைப்பது பற்றி மட்டுமே யோசிக்கிறார் மக்களைப் பற்றி யோசிக்கவில்லை,” என பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டு மக்கள் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், வளர்ச்சி அடைந்த பாரதத்தை (விக்சித் பாரத்) போற்றும் வகையிலும் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் “சேவா ஜோதி யாத்திரை” மற்றும் இருசக்கர வாகனப் பேரணி திண்டுக்கல்லில் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் தொடங்கி, மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்த யாத்திரையில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லி போராட்டத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் முகமூடியை மறைத்துக் கொண்டு நடத்தக்கூடிய போராட்டம். தேர்தல் ஆணையர் தவறு செய்துவிட்டார் என்று சொல்லுகிறார்கள். ஏதோ ஒரு நாளிதழில் வந்த செய்தியை வைத்துக் கொண்டு இளைஞர்களை, மாணவர்களை முட்டாளாக்க முடியும் என்று கரப்பான் பூச்சிகள் நினைக்கிறது. கரப்பான் பூச்சிகள் மக்களுக்கு ஆபத்தானது. அது கேடு விளைவிக்கக் கூடியது. ஒவ்வொரு மாணவர்களும், இளைஞர்களும் பிரதமர் மோடிக்கு பின்னால் நிற்கிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள் எங்களோடு இருக்கிறார்கள். புதிய பாரதத்தை படைக்க மோடியின் பின்னால் கரம்கோர்த்து வலிமையாக நிற்போம்.
தமிழக முதல்வர் விஜய் கோட் சூட் போட்டு, முருங்கைக்காய் பறிப்பது, பட்டு வேட்டி சட்டை அணிவது, அழகாக கை அசைப்பது, டீ-யை குடிப்பது போன்று நடிப்பது, அஜித்தை கட்டிப்பிடிப்பது, ஓடாத கார் பந்தயத்தில் கையாட்டி சிரிப்பது என பலவிதமான மக்களுக்கு தேவையான, முன்னேற்றத்திற்கான விஷயங்களை செய்கிறார். இதையெல்லாம் பார்த்து வியந்து போகிறோம். தமிழகத்தில் எந்த முதல்வரும் செய்யாத இப்படிப்பட்ட ஒரு சாதனையை செய்கிறார் என்றால், இது மாதிரியான சாதனையை இனி யாருமே செய்ய முடியாது. ஆனால் இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது என்பதை நாம புரிந்துகொள்ள வேண்டும்.
ஆட்சி அமைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அடுத்தவர்களுடைய சொத்தை அபகரிப்பது போன்று தன்னுடைய ஆட்சியை தக்க வைப்பதற்கு எம்எல்ஏ-வை அபகரித்துக் கொண்டிருக்கிறார். சட்டம் - ஒழுங்கு நாசமாய் போய்விட்டது. தமிழகத்துல இது மாதிரி ஒரு மோசமான முதல்வரை, தமிழக காவல்துறையை கையாளத் தெரியாத ஒரு முதல்வரை இன்றைக்கு தான் பார்க்கிறோம். கடந்த ஆட்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் போதெல்லாம் 'என் தங்கச்சிங்களை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன், என் தாய்மார்களை விட்டுக் கொடுக்க மாட்டேன் எனக் கூறினார்.
ஆனால் பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றங்கள், கஞ்சா போதைப்பொருள், ஜிஎஸ்டி வருமானம் குறைத்து நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் பின் தங்கிப் போயுள்ளது. முதல்வர் விஜய் ஆட்சியை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதற்காகத் தான் யோசிக்கிறாரே தவிர, மக்களைப் பற்றியோ, மக்களின் முன்னேற்றத்தைப் பற்றியோ யோசிக்கவில்லை. ஊழலை ஒழிப்போம் என்று வாய் கிழிய யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் 25 ஆண்டுகள் தன் வாழ்நாளில் ஊழலை ஒழித்த மாபெரும் தலைவனின் போர்ப்படை தளபதிகளாக இருக்கக்கூடிய பாஜகவின் காரியகர்த்தாக்கள் மட்டும்தான் இந்த சாதனையை நிகழ்த்த முடியும்.
உலக அளவில் 6,312 என்ஜிஓ-க்கள் இருக்கின்றன. அதில் 6,313-வது என்ஜிஓ-வாக அண்ணாமலை ஓர் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். தேசத்தை விட சுய நலம் முக்கியம் என்று யார் நினைக்கிறார்களோ ஓடிப்போவார்கள். ஓடிப்போனவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கடந்த காலத்தில ஆதவ் அர்ஜுனா செவிலியர்கள் போராட்டத்தில் நின்றுகொண்டு ‘ஆட்சி அமைந்த முதல் கையெழுத்து உங்க கையெழுத்து தான்’. என சொன்னாரா இல்லையா.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தரதரவென்று இழுத்துச் சென்று கைது செய்வதா. இதைத்தான் கடந்த ஆட்சியாளர்களும் செய்தார்கள். எதிர்க்கட்சிகளே இல்லாத சர்வாதிகாரத்தைத் தான் விஜய் கொண்டு வருவார் என்றால், ஜனநாயகத்தை ஒழிக்கிற, அரசியலமைப்புக்கு எதிராக இருக்கிற இந்த தவெக என்கிற ரீல் ஆட்சி மட்டும் கிடையாது, இது ஒரு மோசமான ஆட்சி” என்று வேலூர் இப்ராஹிம் கூறினார்.