“மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு மிகப்பெரிய வெற்றி உறுதி”- அமைச்சர் க.தென்னரசு

“மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு மிகப்பெரிய வெற்றி உறுதி”- அமைச்சர் க.தென்னரசு
Updated on: 
1 min read

திருநெல்வேலி: “மக்கள் அளித்த வெற்றியில்தான் தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெகவுக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை வழங்குவார்கள் என்பதில் மாற்றமில்லை” என்று அமைச்சர் க.தென்னரசு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இலங்கை தமிழர் நலவாழ்வு முகாமில் ரூ.22 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கணினி வசதியுடன் கூடிய படிப்பகத்தை வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் க.தென்னரசு, “தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கும் விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மத்திய அரசின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலங்கை தமிழர் நலவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஆண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1,500 ஊக்கத்தொகை தற்போது ரூ.1,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 ஊக்கத்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர் நலவாழ்வு முகாம்களில் வீடுகள் முறையாக கட்டப்பட்டு வருகின்றன. முகாம்களில் வசிப்பவர்களுக்கு எந்தவித குறையும் இல்லை. உயர் கல்வி படித்திருந்தாலும் வேலைவாய்ப்பில் உரிய பலன் கிடைக்காத நிலை இருப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். மக்கள் அளித்த வெற்றியில்தான் இந்த (தவெக) ஆட்சி நடைபெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் மக்கள் மிகப்பெரிய வெற்றியை வழங்குவார்கள் என்பதில் மாற்றமில்லை. வாக்கு கேட்டுச் சென்ற இடங்களில் எல்லாம் முதல்வரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே மக்கள் வரவேற்றனர்.

பெண்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். வெற்றி பயணம், அண்ணன் சீர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் பாதுகாப்பு, இளைஞர் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது.” என்று அமைச்சர் க.தென்னரசு தெரிவித்தார்.

“மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு மிகப்பெரிய வெற்றி உறுதி”- அமைச்சர் க.தென்னரசு
காரைக்கால் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: 300-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in