சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் விஜய் சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை நேற்று பார்வையிட்டார். அப்போது, சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பல்வகைப் பேரிடர் கண்காணிப்புக் கட்டமைப்பையும் அவர் பார்வையிட்டார். இதையடுத்து வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழப்புகள் ஏற்படாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்களிடம் இருந்து புகார்களைப் பெறும் அழைப்பு மையம், அரசுத் துறைகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு வசதிகள், வானிலை முன்னறிவிப்புகளைக் கண்காணிக்கும் தொழில்நுட்பப் பிரிவு ஆகியவற்றையும் முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
முன்னெச்சரிக்கைகள் அடிப்படையில் உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலர் மு.சாய்குமார், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.