

புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், இந்திய பைலட் ஸ்மித் மச்சாரையும் கவுரவிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஃபிளை துபாய் நிறுவனத்தின் விமானம் பயணிகளுடன் புறப்பட்டது. இந்திய பைலட் ஸ்மித் மச்சார், ஓமனைச் சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி ஆகியோர் விமானத்தை இயக்கினர்.
நடுவானில் பறந்த போது துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி பின்னால் இருந்து இந்திய பைலட் மச்சாரைத் திடீரென கோடாரியால் தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர் தரையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அவரது மண்டை ஓடு உடைந்தது. உயிர் போகும் தருவாயிலும் இந்திய பைலட் மச்சார், துணை பைலட் உடன் துணிச்சலாக போராடினார். மிகுந்த சிரமப்பட்டு மச்சார் அறைக் கதவைத் திறந்தார். அவரது சத்தம் கேட்டதும் பயணிகள் சிலர் விரைந்து சென்று துணை பைலட்டை மடக்கிப் பிடித்தனர்.
இதன் பின்னர் விமானத்தில் பயணம் செய்த பைலட்டுகள் சிலர் மேற்கொண்டு விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர். இதற்கிடையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த இந்திய பைலட் மச்சாருக்கு விமானத்தில் பயணித்த பல் மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்து ரத்தப் போக்கை கட்டுப்படுத்தினார்.
அந்த விமானத்தில் மொத்தம் 180 பேர் பயணம் செய்தனர். இதில் 166 பேர் இஸ்ரேலியர்கள். இந்திய பைலட் மச்சாரின் வீரம், விவேகத்தால் இஸ்ரேலியர்கள் உட்பட அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர். விமானத்தைக் கடத்தி டெல் அவிவ் நகர் விமான நிலையம் அல்லது அந்த நகரின் உயரமான கட்டிடம் மீது மோதி மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்த ஓமன் துணை பைலட் ஹமாமி சதித் திட்டம் தீட்டியிருந்தார். அந்த சதித் திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் வீரத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பலமுறை பாராட்டி பேசியிருந்தார். இந்தச் சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் தீபம் ஏற்ற அவருக்கு அழைப்பு விடுத்தேன். அதோடு இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கும் தீபம் ஏற்ற அழைப்பு விடுத்திருக்கிறேன்.
எனது அழைப்புக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும் என்று மோடி உறுதி அளித்தார். இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தவும் அவர் உறுதியேற்றார். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இஸ்ரேல் பிரதமர் என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இருநாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவான ஆலோசனை நடத்தினோம். மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் ஆலோசித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: இஸ்ரேல் நாள்காட்டியின்படி ‘இயார்’ மாதத்தின் 5-ம் நாளில் இஸ்ரேலின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் ஆங்கில நாள்காட்டியின்படி இஸ்ரேலின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி இரவு தொடங்கி மே 1-ம் தேதி வரை இஸ்ரேல் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. நடப்பு ஆண்டில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இரவு தொடங்கி 22-ம் தேதி வரை சுதந்திர தின விழா நடைபெற்றது. வரும் 2027-ம் ஆண்டில் மே 11-ம் தேதி இரவு தொடங்கி 12-ம் தேதி வரை இஸ்ரேல் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழா ஜெருசலேமில் உள்ள ஹெர்சல் மலே சதுக்கத்தில் நடைபெறும். அப்போது இஸ்ரேலின் 12 கோத்திரங்கள் சார்பில் 12 தீபங்கள் ஏற்றப்படும். இதற்காக 12 கோத்திரங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி இஸ்ரேலின் நலனுக்காகப் பாடுபட்ட உள்நாட்டு தலைவர்கள், தனி நபர்களைத் தீபம் ஏற்ற தேர்வு செய்வார்கள்.
பொதுவாக இஸ்ரேல் சுதந்திர தின விழாவுக்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது இல்லை. இதேபோல வெளிநாட்டு தலைவர்கள் தீபம் ஏற்றுவதும் மிகவும் அரிதான நிகழ்வு ஆகும். தீபம் ஏற்றும் நபர்களே இஸ்ரேல் சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினர்களாகப் போற்றப்படுகின்றனர்.
கடந்த ஏப்ரலில் நடந்த இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் முதல்முறையாக அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலே தீபம் ஏற்றினார். இதன்மூலம் இஸ்ரேலில் தீபம் ஏற்றிய முதல் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் தீபம் ஏற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினராகக் கவுரவிக்கப்படுவார் என்று இஸ்ரேல் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் மக்கள் நன்றிக்கடன்: இஸ்ரேல் விமான பயணிகளின் உயிர்களைக் காப்பற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு அந்த நாட்டு மக்கள் நன்றிக் கடன் செலுத்தி வருகின்றனர்.
இஸ்ரேலின் அஷ்டோத் நகரின் நுழைவு வாயிலான அத்ஹலோம் பகுதியில் மச்சாரை பாராட்டி மிகப்பெரிய பதாகை வைக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டு உள்ள இந்த பதாகையில், “ஹீரோவுக்கு நன்றி” என்று இந்தியிலும், ஹீப்ரு மொழியிலும் எழுதப்பட்டு உள்ளது. இந்த பதாகையில் இந்திய, இஸ்ரேல் கொடிகளும் அச்சிடப்பட்டு இருக்கிறது. இஸ்ரேலின் சமூக வலைதளங்களிலும் மச்சார் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களின் பதிவுகள் பரவிக் கிடக்கிறது.
ஸ்மித் மச்சாரால் சாதகம்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ‘லிகுட்’ கட்சிக்கும் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த ‘டுகெதர்’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ஃபிளை துபாய் விமானம் கடத்தப்பட்டு இருந்தாலோ அல்லது டெல் அவிவ் நகர் மீது மோதி தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தாலோ ஆளும் லிகுட் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருக்கும். ஆனால், இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் வீரத்தால் விமானக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்கி உள்ளது.