சென்னை: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜ்,வெண்கலம் வென்ற வீரர் நவீன் சிவகுமார், வீராங்கனைகள் மனிஷா ராமதாஸ், நித்ய ஆகியோருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு மொத்தம் ரூ.1.65 கோடி ஊக்கத் தொகை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் எஸ்.எல்.3- எஸ்.யு.5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அதேபோல, பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் எஸ்.ஹெச்.6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை நித்யஸ்ரீக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் மனிஷா, நித்ய ஆகியோரின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். எதிர்காலத்திலும் அவர்கள் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த வீரர் நவீன் சிவகுமாருக்கு முதல்வர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், அவரது சாதனையை பாராட்டி ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, தடகளத்தில் ஆண்கள் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜ்-க்கு முதல்வர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன், அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.