சென்னை: சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வரை நேரில் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், சிகிச்சை பெறும் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று தமிழக முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், செயலர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மருத்துவமனைக்குள் சென்ற முதல்வர், பல்வேறு வார்டுகளை பார்வையிட்டார்.
பிரசவத்துக்காக காத்திருக்கும் பெண்கள், பிரசவித்த தாய்மார்களை சந்தித்து முதல்வர் பேசினார். அவர்களிடம் மருத்துவ சேவைகளில் இருக்கும் நிறை மற்றும் குறைகளை முதல்வர் கேட்டறிந்தார். அப்போது, பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளை முதல்வர் தனது கைகளில் ஏந்தி கொஞ்சினார். இதனை பார்த்த அங்கிருந்த பெண்கள், தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ‘சிஎம் சார்’ எனவும், ‘அண்ணா’ என்றும் அவர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.
பின்னர், மருத்துவமனை இயக்குநரின் அறைக்கு சென்று பார்வையாளர்கள் அமரும் இடத்தில் அமர்ந்த முதல்வர், மருத்துவமனையின் செயல்பாடுகள், சிகிச்சை விவரங்கள், வசதிகள், கட்டமைப்பை மருத்துவர் குப்புலட்சுமியிடம் கேட்டறிந்தார். ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்குவதற்கு, மருத்துவமனைக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் செயல்படும் செயற்கை கருத்தரிப்பு மையம் மூலம் பிறந்த இரட்டை குழந்தைகள் பற்றி விசாரித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைகள் இருப்பதால், பாதுகாப்பு கருதி அங்கு செல்வதை முதல்வர் தவிர்த்தார். முதல்வர் வந்து ஆய்வு முடிந்து விட்டு செல்லும் வரையிலான சுமார் ஒரு மணி நேரம் மருத்துவமனை முழுவதும் மிகவும் பரபரப்பாக இருந்தது.
இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் குப்புலட்சுமி கூறுகையில், “முதல்வர் விஜய் வருவதாக முன்கூட்டியே எந்த தகவலும் இல்லை. அவர் திடீரென மருத்துவமனைக்கு வந்தது அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மருத்துவமனையில் அளிக்கப்படும் மருத்துவ சேவைகளை பாராட்டி, தொடர்ந்து சிறப்பாக செயல்படுமாறு அறிவுறுத்தினார்” என்றார்.
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், “மருத்துவமனையில் யார் பணம் கேட்டாலும் அவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.
முதல்வர் பிறந்த மருத்துவமனை
1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் பிறந்தார். தனது பிறந்த நாளை பலமுறை இந்த மருத்துவமனையில் கொண்டாடிய அவர், அங்கு பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.