மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது, மதுராந்தகம் ஊருக்குள் சென்ற முதல்வர் விஜய், டிராக்டரில் நஞ்சை உழவு ஓட்டினார்.
மதுராந்தகம்: தவெக வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகம் தொகுதியில் ரோடு ஷோ நடத்திய முதல்வர் விஜய், டீ அருந்தியும், டிராக்டர் ஓட்டியும் வாக்கு சேகரித்தார்.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து கடந்த 25-ம் தேதி முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் தவெக கூட்டணிக் கட்சி தலைவர்களான வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர், காதர் மொகிதீன் உள்ளிட்டோர் பங்கேற்று மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டினர்.
இந்நிலையில், முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் நேற்று இரண்டாவது முறையாக ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்காக பனையூரில் இருந்து வேனில் புறப்பட்ட விஜய், மாமண்டூரில் மதியம் 2.30 மணி அளவில் பிரச்சாரத்தை தொடங்கினார். வாகனத்தில் நின்றபடி சாலை மார்க்கமாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
படாளம், கருங்குழி, பெரும்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் வழியாக அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம், மாம்பாக்கம் வரை 35-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று தவெகவின் விசில் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.
ரோடு ஷோவின்போது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள 16 முக்கிய இடங்களில் தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு முதல்வருக்கு ஆரத்தி எடுத்தும், பூக்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேல், செங்கோல், சிலைகள், படங்கள் என ஏராளமான பரிசுகளை முதல்வருக்கு வழங்கினர்.
தொடர்ந்து மதுராந்தகம் ஊருக்குள் சென்ற முதல்வர் விஜய், டீக்கடையில் அமர்ந்து ஊர் பெரியவர்களுடன் கலந்துரையாடியபடி டீ அருந்தினார். அங்கிருந்து விவசாய நிலங்களை பார்வையிட சென்ற அவர், டிராக்டரில் நஞ்சை உழவு ஓட்டி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
முதல்வரின் வாகன பிரச்சாரத்தையொட்டி 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல்வர் வரும்போது அசம்பாவிதங்களை தடுப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சாலையை கடக்கும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து போலீஸார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி சீராக அனுப்பி வைத்தனர்.