மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, வரும் 25-ம் தேதி முதல்வர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடும் இடம் பாதுகாப்பு காரணங்களுக்காக அச்சிறுப்பாக்கத்தில் இருந்து தொழுப்பேடுக்கு மாற்றப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார் இவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், வரும் 25-ம் தேதி அச்சிறுப்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவிருந்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது பிரச்சாரம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்படி தொழுப்பேடு பகுதியில் திருச்சி-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 40 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்டு இடத்தில் மேடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் மதுராந்தகம் தொகுதியைச் சேர்ந்த நபர்களை மட்டுமே அனுமதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, அக்கட்சியினர் மூலம் ஆதார் எண் திரட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்கள் மற்றும் ஏராளமானோர் வரக்கூடும் என்பதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால் தொழுப்பேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.