சென்னை: நீர் இருப்பு குறைவு காரணமாக, மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், குறுவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் சராசரியாக 52.72 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்து பகுதிகளிலும், கடலூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 20.65 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது. மேலும், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில், ஆண்டுக்கு 32.07 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில், கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் மட்டும் சராசரியாக5.48 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் திருச்சி, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்ய, மேட்டூர் அணையில் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பு தென்மேற்குப் பருவத்தில் ‘எல்நினோ’ எனும் நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது, பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 79.56 அடி, நீர் இருப்பு 41.52 டிஎம்சியாக மட்டுமே உள்ளது.
எனவே, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை உள்ளது. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பாக நெல் சாகுபடி மேற்கொள்ளும் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, நெல் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் பயனடையும் வகையில், குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதன்படி, வடிமுனைக் குழாய் கிணறுகள் (ஃபில்டர் பாயின்ட்ஸ்) மூலம் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.77.50 கோடி, டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை, சொர்ணவாரி நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.57.33 கோடி என மொத்தம் ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில், நெல் இயந்திரநடவு, நேரடி நெல் விதைப்புக்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம், புதிதாக வெளியிடப்பட்ட நெல் ரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம், இயந்திரமயமாக்கல் ஊக்குவிக்கப்படுவதுடன், நீர் மேலாண்மை மேம்படுத்தப்படும். தரமான விதைகள், தொழில்நுட்பங்கள் பயன்பாட்டின் மூலம் நெல் சாகுபடியின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தி திறன் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தஉறுதுணையாகவும் அமையும்.
வேளாண் பொறியியல் துறை வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கி.மீ. நீளமுள்ள ‘சி’, ‘டி’ வாய்க்கால்கள் ரூ.10 கோடி செலவில் தூர்வாரப்பட்டுள்ளன. நீர்வளத் துறை மூலம் ரூ.100 கோடி செலவில் 4,971 கி.மீ. நீளமுள்ள ‘ஏ’, ‘பி’ வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு, 97 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
மேலும், குறுவை சாகுபடிக்கு 10,714 டன் நெல் விதைகள், 4.02 லட்சம் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும். எனவே, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.