கோப்புப்படம்
சென்னை: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் 110- விதியி்ன் கீழ் நேற்று அறிவிப்பு வெளியிட்டு அவர் பேசியதாவது: உலகில் தான் உற்பத்தி செய்யும் பாலைத் தனது சந்ததிகளுக்கு மட்டுமின்றி, மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளுக்கும் வழங்கி உயிரைக் காக்கும் பசுவைத் தெய்வமாகப் போற்றி வளர்த்து வருவது நமது பாரம்பரியத்தின் சிறப்பு.
இன்றைய அறிவியல் உலகில், ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்காகப் பசுவின் உடலில் சுமார் 500 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதாகக் கூறப்படும்போது, பசுவின் உழைப்பை எண்ணி வியக்கத் தோன்றுகிறது.
தமிழகத்தில் 8,800 பால் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள 3.16 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்தின் மூலம் நாளொன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது 4.3 சதவீதம் கொழுப்புச்சத்து மற்றும் 8.2 சதவீதம் இதரச்சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக ரூ.35-ம், மாநில ஊக்கத்தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3 ரூபாயும், என ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலையாக ரூ.38 கடந்த 2022 நவ.5-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளை சுத்தம் செய்து, பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை. உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது.
கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில், நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, அவர்களின் உன்னதமான உழைப்புக்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3.16 லட்சத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக ரூ.1 ரூபாய் உயர்த்தவும், மேலும், அரசு ஊக்கத் தொகையை ரூ.3 லிருந்து ரூ.5 ஆக உயர்த்தவும், இதன் மூலம், ஒரு லிட்டர் பாலுக்கான கொள்முதல் விலையை ரூ.38 லிருந்து ரூ.41ஆக உயர்த்தவும் அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்துக்கு ரூ.30 கோடியும், ஆண்டுக்கு ரூ.360 கோடியும் செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல்வருக்கு நன்றி
தமிழக பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘பால் உற்பத்தியாளர்களுக்கு மாநில அரசிடமிருந்து லிட்டருக்கு ரூ.2-ம், ஆவின் தரப்பிலிருந்து லிட்டருக்கு ரூ.1-ம் ஆக மொத்தம் லிட்டருக்கு ரூ.3 பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக முதல்வருக்கும், பால்வளத்துறை அமைச்சருக்கும் எங்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பால் உற்பத்தியாளர்கள் நலனையும், ஆவின் கூட்டுறவு அமைப்பையும், பொது மக்கள் நலனையும் பாதுகாத்திட அரசும், ஆவின் நிறுவனமும் மறுபரிசீலனை செய்து கொள்முதல் விலை மற்றும் ஊக்கத் தொகை விலையை லிட்டருக்கு ரூ.20 வரை உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.