சென்னை: இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்ற 2 தொகுதிகளுக்கும் மொத்தம் ரூ.1,545 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். மதுராந்தகம் தொகுதி அச்சிறுபாக்கத்தில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்றும், தாராபுரத்தில் ரூ.1,439 கோடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் முதல்வர் விஜய் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்வராக பதவி ஏற்ற பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து, சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 அதிமுக எம்எல்ஏக்களும் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 6-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரத்தில் சத்யபாமா ஆகிய தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
முன்னதாக, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், மகளிர் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வெற்றி பயணம் திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. தேர்தல் முடிவுக்கு பிறகு அத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.
இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம் அத்திமனம் கிராமத்தில் புக்கத்துறை மடுவின் குறுக்கே ரூ.5 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும்.
செம்பூண்டி ஊராட்சியில் உள்ள பொதுப்பணித் துறை ஏரியின் மதகுகள் ரூ.4.50 கோடியில் சீரமைக்கப்படும். நெல்வாய் ஊராட்சியில் உள்ள மடுவை தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தும் பணி ரூ.1.30 கோடியில் மேற்கொள்ளப்படும். தின்னலூர் ஊராட்சியில் புதிய சமுதாய நலக்கூடம் ரூ.70 லட்சத்தில் கட்டப்படும்.
மதுராந்தகத்தில் ரூ.1.80 கோடியில் 6 நெல் கொள்முதல் நிலையங்கள், ஆத்தூரில் ரூ.20 கோடியில் 20 ஆயிரம் டன் கொள்ளளவில் கிடங்கு, ரூ.10 கோடியில் 25 ஏக்கர் பரப்பில் மாநில விதைப்பண்ணை அமைக்கப்படும். அச்சிறுபாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.
பாலாற்றின் குறுக்கில் படாளம் மற்றும் உதயம்பாக்கம் இடையில் உயர்மட்ட தடுப்பணைக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். மதுராந்தகம் உயர்மட்ட கால்வாயை தூர்வாரி கட்டமைப்புகள் படிப்படியாக சீரமைக்கப்படும். மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் விபத்து, அவசரகால சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும். மதுராந்தகம் நகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்கான புதிய தங்கும் விடுதி, படித்த இளைஞர்களுக்கு ரூ.3 கோடியில் அறிவுசார் மையம், பொதுமக்களுக்காக ரூ.4 கோடியில் வாரச்சந்தை அமைக்கப்படும். புக்கத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படுவதுடன், கருங்குழியில் ரூ.50 லட்சத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.
மதுராந்தகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், புதிய வீடுகள் கட்டி வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் விளைபொருட்களை எடுத்துச் செல்லவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணத்துக்காகவும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
தாராபுரம் தொகுதி: திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், குண்டடம், பொங்கலூர், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மூலனூரின் 7 ஊராட்சிகள், பல்லடத்தின் 17 ஊராட்சிகளைச் சார்ந்த மொத்தம் 1,232 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றுநீரை ஆதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1,439 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
தாராபுரத்தில் வீடற்றவர்களுக்கு 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். தாராபுரம் வட்டம், சின்னபுத்தூர் கிராமம், மஜரா குருவப்ப நாயக்கன் பாளையத்தில் 20 ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருந்துவரும் 87 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாசன கால்வாய் மண்திட்டுகளை அகற்றி தூர்வாரும் 159 பணிகள் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். தாராபுரம், மூலனூர், குண்டடம் வட்டாரங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து, 13 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
மூலனூரில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். தாராபுரம் நகராட்சியில் ரூ.6 கோடியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளும், ரூ.40 லட்சத்தில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளும், ரூ.6 கோடியில் திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் பணிகளும் மேற்கொள்ளப்படும். இரு தொகுதிகளிலும் இந்த அறிவிப்புகளை விரைவாக நிறைவேற்ற தொடர்புடைய துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,545.5 கோடியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.