சென்னை: ‘‘ரூ.1 லட்சம் வரை பயிர்க் கடன் பெற்றுள்ள 2 லட்சத்து 38,264 விவசாயிகளுக்கு தலா ரூ.75,000 தள்ளுபடி வழங்கப்படும்’’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு முதல்வர் விஜய் பேசியதாவது: தமிழக மக்கள் நம் உயிர் என்றால், தமிழக விவசாயிகள் நம் உயிர் நாடி. உலகில் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு நடைபெறும் தொழில் என்றால், அது விவசாய தொழில் மட்டுமே.
எந்த நாடு உழவு தொழிலை மதித்து, விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்குகிறதோ, அந்த நாட்டில்தான் மக்கள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும். தவெக அரசு, பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும், பதவியேற்ற 15 நாட்களுக்குள், விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க கடந்த மே 25-ம் தேதி குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க் கடனில் ரூ.50 ஆயிரம் வரை கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
அதன்பின், விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து, குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை முழு தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டதை உயர்த்தி, ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தொகையையும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டது. அதன்மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் கடந்த ஜூலை 31-ம் தேதி வரை ரூ.5,267 கோடி விடுவிக்கப்பட்டு 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவும் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், விவசாய சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள், பயிர்க்கடன் தள்ளுபடியை அதிகரிக்க கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அவர்களின் கோரிக்கைகள் விரிவாக பரிசீலிக்கப்பட்டன. கடந்த காலங்களில் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை
4 - 5 ஆண்டு கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை, 2021 முதல் 2026 வரையான காலத்தில் அரசால் 12 தவணைகளாகக் கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கால அவகாசம் நமது அரசுக்குத் தற்போது இல்லை.
இந்திய ரிசர்வ் வங்கியின் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதியிட்ட கடிதத்தில், அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான செயல்பாட்டு நடைமுறைகளின்படி பயிர்க் கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும், அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிமுறை நடைமுறையில் வந்துள்ளது. இந்த வழிகாட்டுதலின்படியும், தமிழக அரசின் நிதி நிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க் கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க் கடன்கள் 100 சதவீதம் முழுமையாகவும், ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுள்ள பயிர்க் கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையும், ரூ.1 லட்சத்துக்கு மேல் பெற்றுள்ள பயிர்க் கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரையும் தள்ளுபடி வழங்கப்படும். இதன்மூலம், ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2 லட்சத்து 38,264 விவசாயிகளுக்கு தலா ரூ.75,000 தள்ளுபடி வழங்கப்படும்.
இதனால், ஏற்கெனவே பெற்ற தள்ளுபடி தொகைக்கு மேலாக ரூ.40 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும். இந்தக் கூடுதல் பயிர்க் கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். எனினும், தமிழக விவசாயிகளின் நலனில்தான் நமது நலன் உள்ளது என்று கருதி, சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.6,220 கோடி பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குகிறது. இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்தார்.
அமைச்சர் பேசியதற்கு ‘சாரி’ கேட்ட முதல்வர்
சட்டப்பேரவையில் வனத் துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசியதற்கு, முதல்வர் விஜய் ‘சாரி’ கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டு வனத் துறை அமைச்சர் ரஞ்சித்குமார் சில கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாகப் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:
கே.என்.நேரு (திமுக): தலைவரின் பெயரைச் சொல்லி அமைச்சர் பேசுவது என்ன நியாயம். அதற்கு நாங்களும் பேசினால் எப்படி பேரவையை நடத்த முடியும்.
எ.வ.வேலு (திமுக): முதல்வர், முன்னாள் முதல்வர் என்றுதான் குறிப்பிட வேண்டும். பெயரைச் சொல்லக் கூடாது என்று விதி உள்ளது. அதை கடைபிடித்தால் பிரச்சினை இருக்காது.
ஓ.பன்னீர்செல்வம் (திமுக): எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, சட்டப்பேரவையில் இதே போல உறுப்பினர் ஒருவர் தலைவரின் பெயரைக் கூற, எம்ஜிஆர் எழுந்து, ‘‘கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். மன்னிப்பு கேளுங்கள்’’ என்றார். அந்த மாதிரி கண்ணியத்தை நாம் காப்பாற்ற வேண்டும்.
முதல்வர் விஜய்: உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு அமைச்சர் பேசியது தவறுதான். அவர் சார்பில் நான் சாரி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.