ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: JSSC-CGL தேர்வை ரத்து செய்தார் ஹேமந்த் சோரன்

சிபிஐ விசாரிக்க மாணவர்கள் நிபந்தனை
ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: JSSC-CGL தேர்வை ரத்து செய்தார் ஹேமந்த் சோரன்
Updated on
1 min read

ராஞ்சி: அரசுத் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் JSSC-CGL தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

திங்கட்கிழமை அன்று அம்மாநில அமைச்சரவை கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியதாவது:

“தேர்வு முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். அது சிறியது, பெரியது என எதுவாக இருந்தாலும் விசாரணை நடைபெறும். இது 2014 முதல் நடைபெற்ற தேர்வுகளுக்கு பொருந்தும்.

டிடிபிஎல் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இது தேர்வு, அதன் முடிவுகள், அதில் தேர்ச்சி பெற்றவர்கள் என அனைத்துக்கும் பொருந்தும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்கள் தங்களது எதிர்காலம் குறித்து கவலை கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்வது ஒன்று மட்டும்தான். அது தேர்வு சீர்திருத்தங்கள் சார்ந்து வெளிப்படைத்தன்மை உடன் அரசு செயல்படும் என்பதுதான்” என்றார்.

மாணவர்கள் கொண்டாட்டம்

JSSC-CGL தேர்வு ரத்து செய்யப்பட்டதை அறிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அதை கொண்டாடினர். மேலும், தேர்வு முறைகேடு சார்ந்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

போராட்டத்தின் பின்னணி என்ன?

கடந்த சில மாதங்​களாகவே ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (ஜேபிஎஸ்​சி) மற்​றும் ஊழியர் தேர்வு வாரி​யம் (ஜேஎஸ்​எஸ்​சி) மூலம் நடத்​தப்​படும் தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடப்​ப​தாகக் கூறி மாணவர்​கள் போராடி வரு​கின்​றனர். அரசு தரப்​பில் ஏற்​கெனவே ஐந்து முறை பேச்​சு​வார்த்தை நடத்தப்பட்ட போ​தி​லும், மாணவர்​களின் முக்​கியக் கோரிக்கைகள் ஏற்​கப்​பட​வில்​லை.

இதனால் மாநிலம்​ தழு​விய அளவில்​ போ​ராட்​டங்​கள்​ தீவிரமடைந்து வருகின்​றன. மாணவர்கள் அமைப்பினருடன் ஜார்க்கண்ட் அமைச்சர் சுதிவ்யா குமார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, தேர்வுகள் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமையில் ஒரு குழுவை அமைக்க ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் சுதிவ்யா தெரிவித்தார். ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்களுக்கு சிஐடி சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரின் ராஜினாமாவையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: JSSC-CGL தேர்வை ரத்து செய்தார் ஹேமந்த் சோரன்
மீண்டும் ‘ஜியோ பிரைம்’ அறிமுகம்: பயனர்களுக்கான சலுகைகள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in