தமிழகம்

தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனு

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய விஜய், ஆதவ் அர்ஜுனா தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, இன்றைக்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இன்று,இந்த வழக்குகள் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக பெரம்பூரைச் சேர்ந்த வாக்காளர் தினேஷ் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்த வழக்கு மற்றும் விஜய்யின் வெற்றியை எதிர்த்து பெரம்பூர் தொகுதி வாக்காளர் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT