சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. எனினும், ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.
பின்னர் அந்தக் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை அமைத்தது. இதற்கிடையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை ஒருங்கிணைத்துத் தனி அணி ஒன்றை உருவாக்கினார்.
தவெக அரசுக்கு ஆதரவளித்து அதன் மூலம் அமைச்சர் பதவியைப் பெறுவதே அவரது திட்டமாக இருந்தது. இத்திட்டத்துக்கு வசதியாக, தான் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஆனால், தவெக.வில் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை.
சி.வி.சண்முகத்தின் ராஜினாமாவால் காலியாக இருக்கும் அந்த ஒரு மாநிலங்களவை இடத்துக்கு வரும் ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய சட்டப்பேரவையில் தவெக அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால், அக்கட்சி ஆதரவு தரும் வேட்பாளரே எளிதில் வெற்றி பெற முடியும். எனினும், இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தவெக தரப்பில் வேட்பாளர் எவரும் அறிவிக்கப்படவில்லை. தவெக சார்பிலேயே வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு முதல் முறையாக மாநிலங்களவையில் கணக்கு தொடங்கும் என்று செய்திகள் வெளியாயின. சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய சிலரில் ஒருவருக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாயின.
அதேநேரத்தில் கூட்டணி கட்சிகளில் ஒருவருக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது. இதனால், யார் வேட்பாளர் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்தச் சூழலில், தமிழக முதல்வர் விஜய்யை நேற்று முன்தினம் நேரில் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மாநிலங்களவை சீட்டை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு முன்னதாகவே காங்கிரஸ் தேசியத் தலைமையில் இருந்தும் இதுதொடர்பாக முதல்வரிடம் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
கிரிஷ் சோடங்கர் சந்திப்பு:
இதன் தொடர்ச்சியாக, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது காங்கிரஸுக்கான எம்.பி. சீட் கோரிக்கையை அவர் முன்வைத்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் சோடங்கர், ‘‘காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை சீட் வழங்குவது குறித்து முதல்வர் விஜய் பரிசீலனை செய்வதாக எங்களிடம் உறுதி அளித்துள்ளார்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “ஜூன் 18-ம் தேதி தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தவெக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், மாநிலங்களவையில் காங்கிரஸின் ஒட்டுமொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 29 ஆக உயரும்.
இண்டியா கூட்டணியில் நீடிக்கும் திமுக
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியதாவது:
காங்கிரஸ் மேலிடம் எனக்குக் கோவா மாநிலத் தலைவர் பொறுப்பைக் கூடுதலாக வழங்கியுள்ளது. இதனைப் பரிசாகக் கருதுவதை விட, என் மீது நம்பிக்கை வைத்து வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்பாகவே பார்க்கிறேன். இதில் நான் சிறப்பாகப் பணியாற்றுவேன். பாஜக என்ன செய்கிறது, அவர்களின் உண்மையான சிந்தனை என்ன என்பது சில நேரங்களில் யாருக்குமே புரிவதில்லை.
அவர்களின் செயல்பாடுகளும் எண்ணங்களும் முற்றிலும் வெவ்வேறான முரண்பட்ட கோணங்களில் உள்ளன. தேசிய அளவிலான இண்டியா கூட்டணி என்பது டெல்லியில் உள்ள எங்கள் மேலிடத் தலைவர்களால் கையாளப்படும் ஒரு விவகாரம். தற்போதைய நிலவரப்படி திமுக இன்னும் இண்டியா கூட்டணியின் ஓர் அங்கமாகவே நீடித்து வருகிறது. அதில் தற்போதைக்கு வேறு ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி எனக்குத் தெரியாது. இவ்வாறு கிரீஷ் சோடங்கர் கூறினார்.