சென்னை: ஆடம்பரத்துக்காக கடன் வாங்கிச் செலவு செய்வது ஒருவரை பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்.
அனைவரும் தமது வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என உலக சிக்கன தினத்தையொட்டி முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிக்கனம், சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அக்.30-ம் தேதி (இன்று) உலக சிக்கன தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: ‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’ என்ற குறளில் சிக்கனத்தின் சிறப்பு குறித்து திருவள்ளுவர் விளக்குகிறார்.
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை, பல வளங்களும் இருப்பதுபோல தோன்றி, இல்லாமல் மறைந்து கெட்டுவிடும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
செலவு செய்ததுபோக எஞ்சியதைச் சேமிக்காமல், சேமித்தது போக எஞ்சியதை செலவு செய்தால் எதிர்காலத்தில் நம்பிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கலாம்.
இன்று நாம் செய்யும் சிறுசேமிப்புதான், ஆபத்துக் காலத்தில் நமக்குப் பேருதவியாகத் துணை நிற்கும். ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதற்கிணங்க, நாம் சேமிக்கும் ஒவ்வொரு சிறிய தொகையும் நம் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்.
ஒருவர் தன் நிதி நிலையை அறிந்து அதற்கு ஏற்ப செலவழிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஆடம்பரத்துக்காக கடன் வாங்கிச் செலவு செய்வது ஒருவரை பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்.
எனவே, ஒவ்வொருவரும் தமது வருவாயில் ஒரு பகுதியைச் சேமிக்க வேண்டும். அத்தகைய சேமிப்பு பாதுகாப்பானதாக அமைய அருகில் உள்ள அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்க வேண்டுகிறேன்.
சேமிப்பு மூலம் சிறப்பான வாழ்வுக்கு வழிவகுப்போம் என்று உலக சிக்கன தினத்தில் உறுதியேற்போம். சிக்கனத்தைக் கடமையாக்குவோம். சேமிப்பை வழக்கமாக்குவோம். வளமான வாழ்வை உரிமையாக்குவோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.