சென்னை: திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் வைததற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி திணிக்கும் முயற்சியை கைவிடாவிட்டால், தமிழர்களின் சூட்டை பாஜக அரசு உணர வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது பாஜக. ‘மொழி ஒன்று - வரி வடிவம் மூன்று’ எனும் வகையில் இந்தி பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான இந்தி திணிப்பு செயலில் பாஜக இறங்கியுள்ளது.
வருங்கால வைப்பு நிதிஅலுவலகங்களில் ஏற்கெனவே ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயரை திணித்து விட்டனர். மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ ஆகிவிட்டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்ட பெயர் மாற்றத்திலும் இதே வேலையை தான் காட்டினார்கள்.
தற்போது திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்துள்ளனர். நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர். கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது.
தமிழர்களின் சுயமரியாதையை சீண்டி பார்க்கும் இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். திருச்சி ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் இந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டு, சரியான தமிழ் பெயரை அங்கு இடம்பெறச் செய்யவேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை மத்திய பாஜக அரசு உணர வேண்டி இருக்கும் என எச்சரிக்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், திருச்சி ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கப்பட வேண்டும். திருச்சி ரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும்.
இதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி, தி.க. தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ், எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்து, தமிழில் பெயர் சூட்ட வலியுறுத்தினர்.