தமிழகம்

“தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்பதே 2026 தேர்தல்!” - திருச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முழக்கம்

வேட்டையன்

திருச்சி: “நடக்க இருக்கும் தேர்தல், திமுக vs என்டிஏ கிடையாது. தமிழ்நாடு vs என்டிஏ. வெல்லப்போவது, தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்பதுதான் 2026 தேர்தல். இதில் நம்முடைய தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும் என்றால், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும்” என்று திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருச்சி சிறுகனூரில் இன்று நடைபெற்ற திமுகவின் 12-ஆவது மாநில மாநாட்டில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியது: “எல்லா மக்களும் திருச்சியை நோக்கி. இங்கு பாருங்கள் திரும்பும் திசையெல்லாம் கருப்பு சிவப்புதான். திரும்பும் திசையெல்லாம் அண்ணாவின் தம்பிகள்.

தெற்கிலிருந்து வடக்கு வரை தமிழ்நாடே இந்த சிறுகனூரில் திறந்துள்ளது. எதிரிகளால் வீழ்த்த முடியாத திமுகவின் பெரும் சேனை இங்கே திரண்டுள்ளது. இந்த சேனையின் தலைமை தொண்டனாக எனது அழைப்பை ஏற்று வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

          

திமுக வரலாற்றில் எத்தனையோ திருப்புமுனைகளுக்கு அடித்தளமிட்ட தீரர்கள் கூட்டமாம் திருச்சியில் இந்த மாநாட்டை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த மாநாடு எதற்கு என நிறைய பேர் கேட்கிறார்கள். கிரிக்கெட் போட்டியில் முதல் பந்தில் இருந்து ரன் சேர்ப்பது முக்கியம்தான். அதேசமயம் இறுதி ஓவர்களில் அடித்து ஆடி கடைசி பந்தில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து வெற்றி பெறுவது சிறந்த பினிஷிங்காக இருக்கும். அப்படிப்பட்ட வெற்றியை 2026 தேர்தலில் நாம் பெறுவதற்குதான் இந்த மாநாடு. அதற்காக இந்த மாபெரும் மாநில மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் கே.என்.நேருவுக்கு பாராட்டுகள்.

‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற நமது இன்றைய முழக்கம் தனிப்பட்ட ஸ்டாலினுக்கான முழக்கம் அல்ல. திமுக தொடரட்டும் என்பதுதான் அதன் பொருள். திருச்சியை மாநாட்டுக்காக நாம் ஏன் தேர்ந்தெடுக்கிறோம் என்றால் இது தமிழ்நாட்டின் மைய பகுதி மட்டுமல்ல. இதுதான் கழகத்தின் மாநாட்டு பகுதி. திமுக-வின் 12 மாநில மாநாடுகளில் 7 மாநாடுகள் திருச்சியில்தான் நடைபெற்றுள்ளது.

பெரியார் மாளிகை கட்டி வாழ்ந்தது இதே திருச்சியில்தான். தனித்தனி இயக்கமாக இருந்தாலும் கொள்கையால் ஒருபோதும் பிரியாத பெரியாரும் அண்ணாவும் வெவ்வேறு வழக்குகளில் ஒரே சிறையில் இருந்தது திருச்சியில்தான். இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தை பெரியாரும், கருணாநிதியும் நடத்தியது திருச்சியில்தான். கருணாநிதி முதல் முதலாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் இதே திருச்சியில் இருந்த குளித்தலை தொகுதியில்தான்.

இப்படி பல்வேறு திருப்புமுனைகளை கழகத்துக்கு திருச்சி தந்துள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதியின் வழிநடத்தப்பட்ட நாம்தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டுமென்ற உறுதியை நாம் ஏற்க வேண்டும். இனி எந்நாளும் திமுகதான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமென சூளுரைக்க நாம் இங்கு குவிந்துள்ளோம்.

தமிழ் இனத்தை காக்க தகுதியும், திறமையும், உழைப்பும் கொண்ட ஒரே படை நமது கருப்பு சிவப்பு படைதான். நமக்கென்று ஒரு மாபெரும் வரலாறு உண்டு. தமிழை காத்தவர்கள் நாம். தமிழ்நாட்டுக்கு பெயர் வைத்தவர்கள் நாம். தமிழ் மண்ணுக்கு காவல் அரணாக இருப்பது நாம்தான். தமிழ்நாடு நம்மை நம்பித்தான் உள்ளது. நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் உள்ளோம். திராவிட ஆட்சி தொடர நாம் உழைக்க வேண்டும்.

கடந்த 2021 தேர்தலுக்கு முன்பாக இதே இடத்தில் 7 இலக்குகளை உறுதிமொழிகளாக நான் அறிவித்தேன். வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கும் மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் முறையான தண்ணீர், அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர புதுவகை கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கை தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு. இந்த ஏழு இலக்குகளையும் நமது ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் நிறைவேற்றிக் காட்டியுள்ளோம். இதை நமது எதிரிகளே ஒத்துக்கொள்வார்கள்.

முந்தைய ஆட்சியோடு நமது ஆட்சியை ஒப்பிட்டால் நமது செயல்திட்டங்களும், நமது சாதனைகளும் தெரியும். தொழில் துறை, வேளாண் துறை, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், விளையாட்டு துறை என அனைத்திலும் முன்னேற்றம் காண செய்துள்ளோம். நமது அரசின் திட்டங்கள் மூலம் எண்ணற்ற மக்கள் பலன் அடைந்துள்ளனர். இதை மக்களிடத்தில் சொல்லுங்கள். இதனால் தான் வெல்வோம் 200 என நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

நீங்கள் பிரச்சாரத்துக்கு செல்லும் போது மக்கள் யாரை கேட்டாலும் நம் அரசின் திட்டங்களில் பயன் அடைந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாக்களித்தால் போதும் நாம் வெற்றி பெறுவோம். அதை உறுதி செய்வதுதான் நமது பணி. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாம் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றிவிட்டு இன்று மக்கள் முன்பு நம்பிக்கையுடன் வந்து நிற்கிறேன்.

கனிமொழி கருணாநிதி தலைமையில் தயாராகி வரும் தேர்தல் அறிக்கையை நாம் வெளியிட உள்ளோம். சமீப காலமாக கவனித்தீர்களா என்றால் மற்ற அரசியல் கட்சிகள் தவணை முறையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். நமது திட்டங்களை பிரதி எடுத்துதான் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஏனெனில் நமது திட்டங்களை இனி யாராலும் மாற்ற முடியாது. மகளிர் உறுதித் திட்டம், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், மகளிருக்கான விடியல் பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் என எதையும் மாற்ற முடியாது. இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ளவை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை ஆளுவான்.

நாம் இதையெல்லாம் செய்துவிட்டு மக்களிடம் வாக்கு சேகரிக்கிறோம். ஆனால், அதிமுக கூட்டணி… மன்னிக்கவும் அப்படி சொன்னால் மோடியும், அமித் ஷாவும் கோபித்துக் கொள்வார்கள். என்டிஏ கூட்டணி என்று சொல்ல வேண்டும். கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாமல்தான் இன்று அதிமுக உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நமக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதி, ஜல் ஜீவன் நிதி, பேரிடர் சிறப்பு நிதி என எந்த நிதியும் தரவில்லை. ஆனால், பாஜக தமிழ்நாட்டுக்கு தந்தது எல்லாம் ஆளுநர் மூலம் குடைச்சல், இந்தி திணிப்பு, மாணவர்கள் உயிரோடு விளையாட கூடிய நீட் தேர்வு, ரெய்டுகள் மூலம் நம்மை மிரட்டி பார்ப்பது. இதைத்தான் நமக்கு என்டிஏ கூட்டணி தந்துள்ளது. இப்படி இருக்கையில் நம் மக்கள் எப்படி அவர்களுக்கு வாக்களிப்பார்கள். உங்களுக்கு தமிழ்நாடு எப்போது ‘நோ என்டரி’ தான்.

சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன். இந்தத் தேர்தல், தமிழ்நாடு vs என்டிஏ இன்னும் சொன்னால், தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்று பார்க்கும் தேர்தல் சொன்னேன். உடனே நம்முடைய எதிரிகள் என்ன சொன்னார்கள்? இது சட்டமன்றத்துக்கு நடக்கும் தேர்தல்தானே? இதை ஏன் தமிழ்நாடு Vs என்டிஏ என்று தி.மு.க. சொல்கிறது? தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல் என்று ஏன் ஸ்டாலின் சொல்கிறார் என்று கேட்கிறார்கள்.

தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கம், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களிடம் வரும் கட்சியல்ல. மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் கட்சி. எங்களுக்குத் தெரியும்... தமிழ்நாட்டின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின், உண்மையான எதிரி யார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்... அந்த எதிரியை எதிர்க்கும் தெம்பும், திராணியும் கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க என்பது மக்களுக்கும் நன்றாக தெரியும்!

அ.தி.மு.க. என்கிற முகமூடியை போட்டுக் கொண்டு வந்தால், எங்களுடைய தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களை அடையாளம் தெரியாமல் போய்விடுமா? உங்களின் முகத்திரையைக் கிழித்து, தமிழ்நாட்டு மக்களிடம் நாங்கள் அம்பலப்படுத்துவோம். தமிழ்நாட்டை எப்படியாவது நம்மிடம் இருந்து, விழுங்கிடலாம் என்று நினைக்கிறது காவிக் கூட்டம். எங்கள் கருப்பு - சிவப்பு பட்டாளம் இருக்கிறவரை அது நடக்கவே நடக்காது. உங்கள் அப்பனே வந்தாலும் நடக்காது. நடக்க விடமாட்டோம். இது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான், அ.தி.மு.க. என்ற கட்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறார்கள்.

அரசியலில் நேர் எதிராக இருந்தாலும், அ.தி.மு.க தொண்டர்கள் மீது நான் உண்மையாகவே பரிதாபப்படுகிறேன். அவர்களுடைய உணர்வுக்கு மாறாக கட்சியைக் கொண்டு போய் டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி. தன் சொந்த நலனுக்காக, சுயலாபத்துக்காக, எப்படியாவது முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற நப்பாசையில், பழனிசாமி அடிமையாகக் கிடக்கிறார். அவரை வைத்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் அழிக்கும் வேலையை பா.ஜ.க செய்து கொண்டிருக்கிறது.

இப்போது கூட பிஹாரில், என்ன நடக்கிறது என்று நாடே பார்க்கிறதே. பிஹார் மாநிலத்தில் இதுவரை பா.ஜ.க. முதலமைச்சர் இருந்ததே கிடையாது. நிதிஷ்குமாரை முன்னிறுத்தி தேர்தலில் ஜெயித்துவிட்டு, இப்போது காரியம் ஆனதும் அவரை ஓரங்கட்டிவிட்டு, பா.ஜ.க. முதலமைச்சரை உள்ளே கொண்டு வரப் போகிறார்கள். இதையேதான் தமிழ்நாட்டிலும் செய்யலாம் என்று முயற்சி செய்கிறார்கள்.

நான் அடித்துச் சொல்வேன்... சேலஞ்ச் செய்து சொல்வேன்... இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், எங்கள் தி.மு.க.வும் இருக்கும் வரை, பா.ஜ.க.வால் தமிழ்நாட்டை ஆள முடியவே முடியாது. நீங்கள் அந்தர் பல்டி அடித்தாலும், என்ன முகமூடி போட்டுக் கொண்டு வந்தாலும், புதிது புதிதாக யாரை அழைத்துக் கொண்டு வந்தாலும், எத்தனை ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டிப் பார்த்தாலும், தமிழ்நாடு எப்போதுமே உங்களுக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்.

நாங்கள் பார்க்காத படையெடுப்பா? தி.மு.க. பார்க்காத மிரட்டலா? நீங்கள் இந்தியா மேப்பில் இருக்கும் எந்த மாநிலத்தின் மீது வேண்டுமானாலும், காவி அடித்திருக்கலாம்! ஆனால், தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்கவே பலிக்காது! இங்கே எப்போதுமே நாங்கள்தான்! எங்கள் மண்ணில், நாங்கள்தான் ஜெயிப்போம்! நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம்!

நடக்க இருக்கும் தேர்தல், தி.மு.க. vs என்டிஏ கிடையாது! தமிழ்நாடு வெர்சஸ் என்டிஏ. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், வெல்லப்போவது, தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதுதான் 2026 தேர்தல். இதில் நம்முடைய தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும் என்றால், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும். உங்கள் வாக்குகளைத் தி.மு.க.வுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் போடுங்கள் என்று கேளுங்கள்! இதுதான் நீங்கள் அடுத்த இரண்டு மாதத்திற்கு இடைவிடாமல் மக்களிடம் பரப்ப வேண்டிய மெசேஜ்!

நான்காவது பொதுத் தேர்தலை இணைந்து சந்திக்கும் கூட்டணியும், நம்முடைய பெரிய பலம்தான். மற்றவர்களைப்போல் வெறும் தேர்தலுக்காக, எலக்‌ஷன் சீசனில் மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை. கொள்கையின் அடிப்படையில், கொள்கைத் தோழர்களான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகவும் நீங்கள் களத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிதான், சொன்னதைச் செய்யும், சொல்லாததையும் செய்யும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால், தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி... நீங்கள் ரெடியா? நம் மண்- மொழி- மக்களை காக்க, நான் ரெடி... நீங்கள் ரெடியா? திராவிட மாடல் 2.0-விற்கு, நான் ரெடி... நீங்கள் ரெடியா? நம்முடைய வெற்றி, திமுக வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வெற்றி. ஏழாவது முறையும் நாம்தான். இனி எப்போதும் நாம்தான். திருச்சியின் எழுச்சி தமிழ்நாடெங்கும் பரவட்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT