தமிழகம்

“அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது” - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

டெக்ஸ்டர்

கடலூர்: டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு, டெல்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டில் ஆளக் கூடாது. தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் ஆணவ பாஜகவும், அடிமை அதிமுகவும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

          

கடலூரில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “2021-இல் ஆறாவது முறையாக கழக அரசு அமைந்தவுடனே, இது ‘திராவிட மாடல்’ அரசு என்று பெயர் வைத்தோம். பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சி நாசம் செய்த நிர்வாகத்தையும், நிதி நிலைமையையும் நாம் சரி செய்தோம்.

சரி செய்தோம் என்று சொல்வதைவிட, 0.07 விழுக்காடு அளவுக்கு பழனிசாமி படுபாதாளத்தில் தள்ளிய நம்முடைய மாநிலத்தை, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், சாதனைத் திட்டங்களால் 11.19 விழுக்காடு வளர்ச்சியுடன், இந்தியாவிலேயே ‘தமிழ்நாடுதான் நம்பர் ஒன் ஸ்டேட்’ என்று கொண்டு வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, உலகப் பத்திரிகைகள் எல்லாம் தமிழ்நாடு ‘சூப்பர்ஸ்டார் ஸ்டேட்’ என்று தலைப்புச் செய்தியாக போடும் அளவிற்கு சூப்பர் ஹிட் கவர்மெண்ட்டை கொடுத்தோம்.

திராவிட மாடலில் நாம் செய்த ஒவ்வொரு திட்டமும் ஹிட்! இன்னும் சொன்னால், சூப்பர் ஹிட்! சூப்பர் டூப்பர் ஹிட்! அடுத்து, திராவிட மாடல் 2.0–விற்கு ரெடி ஆகலாமா? நான் ரெடி. நீங்கள் ரெடியா? தனைத் திட்டங்களை நிறைவேற்றிய தெம்புடன்,திராணியுடன்,உரிமையுடன் உங்களிடம் நான் வந்திருக்கிறேன்.

கடலூர் மாவட்டத்தில் இந்த 9 பேரின் வெற்றியும் உறுதியா? நூற்றுக்கு நூறு அடிக்க வேண்டும். அதற்கு கடலூர் மாவட்டம் தயாரா? வெற்றி உறுதியாகிவிட்டது. வேட்பாளர்கள் உட்காரலாம்.

மகளிர் மேம்பாட்டுக்கு, முதல் நாள் முதல் கையெழுத்திலேயே, விடியல் பயணம் திட்டத்தை சாத்தியப்படுத்தியவன்தான் இந்த ஸ்டாலின்.இன்றைக்கு நம்மைப் பின்பற்றி, நாட்டில் இருக்கும் பல்வேறு மாநிலங்களில், பெண்களுக்கு கட்டணமில்லாப் பயணத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய திட்டங்களை காப்பி அடித்தே பழக்கப்பட்ட அதிமுகவும் அதைப் பற்றி கூறியிருக்கிறது. 2016 தேர்தல் அறிக்கையில் வயதானவர்களுக்கு எல்லாம் பேருந்துகளில் இலவசம் என்று சொன்னார்கள். செய்தார்களா? முகவைப் பொறுத்தவரையில், சொன்னால், சொன்னதைச் செய்யும் வரலாறும், திறனும் திமுக-விடம் மட்டும்தான் இருக்கிறது.

மகளிர் முன்னேற்றத்திற்கு அடிப்படையான இந்த விடியல் பயணம் திட்டத்தை, நியாயமாக, பிரதமர் வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? நகரங்களில் பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணிக்கும் காரணத்தினால், மெட்ரோ ரயில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம். மெட்ரோ லாபகரமாக இயங்க முடியவில்லை என்று கவலைப்படுகிறார். பிரதமரே இப்படி பேசுகிறார் என்றால் என்ன பொருள்? அவருக்கு இந்தத் திட்டம் பிடிக்கவில்லை. மகளிர் முன்னேற்றத்தைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அதுமட்டுமல்ல, அவர்கள் வந்தால் இந்த விடியல் பயணம் திட்டத்தை நிறுத்திவிடுவார்கள் என்றுதான் பொருள். மோடியின் பேச்சை மீறி செயல்படும் துணிவு, பழனிசாமிக்கு இருக்கிறதா? நிச்சயம் இல்லை.

இங்கே இருக்கும் மகளிரைக் கேட்கிறேன், உங்களுடைய உரிமையான விடியல் பயணத்தை அதிமுக அடிமைகள் நிறுத்த நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்களா? விடியல் பயணம் மட்டுமல்ல, தமிழ்நாட்டைச் சீரழிக்க நிறைய திட்டங்களை வைத்திருக்கிறார்கள். என்ன அந்த பிளான்? விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். அதற்கான ட்ரெய்லர்தான், உதய் மின் திட்டம்.

அதேபோன்று, தமிழை அழிப்பதற்கான பிளான்தான், மும்மொழித் திட்டம். அதுமட்டுமல்ல, மாநில மக்களே தங்களுக்கான அரசை தேர்ந்தெடுப்பதை நாசம் செய்யத்தான், ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டம். அடுத்து, நம்முடைய உழைப்பையும், வரிப்பணத்தையும் சுரண்டுவதற்குத்தான், ஜிஎஸ்டி. விரைவில், தமிழ்நாட்டினுடைய பிரதிநிதித்துவத்தையும் – அதிகாரத்தையும் குறைக்கத்தான், தொகுதி மறுசீரமைப்பு.

இவ்வாறு வரிசையாக நிறைய பிளான் வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் முறியடிக்க யாரால் முடியும் சொல்லுங்கள்? நம்மால் மட்டும்தான் முடியும். இங்கே மேடையில் இருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளால்தான் முடியும். நம்முடைய தமிழ்நாடு டாப் கியரில் முன்னோக்கிச் செல்ல வேண்டுமென்றால், திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் அமைய வேண்டும்.

‘பச்சைப்பொய்’ பழனிசாமி ஆட்சியில், தமிழ்நாடு எப்படியெல்லாம் பாழாக்கப்பட்டது? கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன். இதுதான் பழனிசாமியின் ‘டிரேட்மார்க்’! தொழில் தொடங்க வந்த கம்பெனிகள் எல்லாம், வெளிமாநிலங்களுக்கு ஓடினார்கள். அமைச்சர்களே குட்கா மாமூல் வாங்கினார்களே… மாமூல் பட்டியலில் இரண்டு டிஜிபிக்கள் இருந்தார்களே. பழனிசாமிக்கு தெரியாமலா இந்த மாமூல் வசூல் நடந்தது?

பழனிசாமி அவர்களே... தமிழ்நாடு போதைப் பொருள்மயமானது உங்கள் ஆட்சியில்தான். பட்டித்தொட்டி எல்லாம் போதைப் பொருள் விற்கப்பட்டது உங்கள் ஆட்சியில்தான். கையைக் கட்டி வேடிக்கை பார்த்த உங்களுடைய பாக்கெட்டிற்கு வந்த மாமூல் எவ்வளவு? இப்படி என்னால் பழனிசாமி பற்றி, பெரிய லிஸ்டே போட முடியும்!

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியைப் பொறுத்தவரையில், வளர்ச்சியில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும் என்று சிஸ்டமேட்டிக்–ஆக திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறோம். வளர்ச்சி என்றால், அனைத்து மாவட்டங்களுக்கான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று, நம்முடைய திராவிட மாடலில் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

உங்கள் உரிமைத்தொகையை தடுக்க வேண்டுமென்று யார் நினைத்தாலும், அந்தச் சதித் திட்டம் தோன்றும்போதே, அதை உடைப்பான், இந்த ஸ்டாலின்.

அதற்கு சாட்சிதான், பிப்ரவரி 13. அந்த நாள், உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? காலையில் விடியும்போது, அலாரம் போன்று, ஐந்தாயிரம் ரூபாய் வந்துவிட்டது எனும் குறுஞ்செய்தி ஒலிதான், ஒரு கோடியே 31 லட்சம் வீடுகளில் ஒலித்தது. ஒலித்தது என்று சொல்வதைவிட, மகிழ்ச்சியைக் கொடுத்தது.

நல்லவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைப்பவர்களின் நிம்மதியைக் கெடுத்துவிட்டது. இப்போது பழனிசாமி, காப்பியடித்து அந்த உரிமைத்தொகையை உயர்த்துவோம் என்று சொல்லி இருக்கிறார்.

‘துரோகத்தின் முழு உருவமான’ பழனிசாமி அவர்களே, ஏற்கெனவே கடந்த தேர்தலிலேயே உங்களுடைய பொய் வாக்குறுதிகளை நம்பாமல், மக்கள் உங்களை புறக்கணித்துவிட்டார்கள். இப்போது, உரிமைத்தொகை வாங்கும் பெண்களை கொச்சைப்படுத்திவிட்டு, எந்த முகத்தை வைத்துக் கொண்டு, புது வாக்குறுதியை கொடுக்கிறீர்கள்?

சில நாட்களுக்கு முன்னர், அதிமுகவின் பத்தாண்டுகால ஆட்சியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் நிறைவேற்றவில்லை என்று கூறினேனே? அதற்கு இதுவரைக்கும் பதில் சொன்னீர்களா? ஆனால், நான் சொன்னதை எல்லாம் செய்து முடித்து, தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு “சூப்பர்ஸ்டாரை” நான் களத்தில் இறக்கியிருக்கிறேன். அதுதான் இந்தத் தேர்தல் அறிக்கை.

விவசாயிகள் நிறைந்த மாவட்டம் இது. மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு. ஏற்கெனவே படித்திருப்பீர்கள். இருபது லட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சாரப் பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்! மகிழ்ச்சியா? நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இன்னொரு முக்கியமான வாக்குறுதி. இயற்கை சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் எதுவென்றால், அது கடலூர் மாவட்டம்தான். உங்களுடைய வேதனையை துடைக்க வேண்டும் என்றுதான், போர்க்கால இழப்பீடுகளாக, இறவைப் பாசனப் பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், நீண்டகாலப் பயிர்களுக்கு 27 ஆயிரம் ரூபாயும், மானாவாரிப் பயிர்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். அடுத்து, பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும். மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடி குறைவுக் கால சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்களில் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இவையெல்லாம் மட்டுமல்லாமல், டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம். கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கடலூர் துறைமுகம் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும். இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் கொஞ்சம்தான். தேர்தல் அறிக்கை புத்தகத்தில் இன்னும் ஏராளம் இருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுடைய முன்னேற்றம் மட்டுமல்ல, நம்முடைய இளைஞர்கள் தரமான கல்வி கிடைக்க வேண்டும்; திறன் மேம்பாடு அடைய வேண்டும்; உயர்ந்த வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று பாடுபடுகிறோம்.

தவறுக்கு மேல் தவறுகள் செய்த பழனிசாமி, தன்னுடைய தவறுகளிலிருந்து தப்பிக்க சரண்டரான இடம்தான் பாஜக. வாஷிங்மெஷின்! தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க அவர் கொடுத்த விலைதான், தமிழ்நாட்டின் உரிமைகள்! தமிழ்நாட்டிற்குள் கால் பதிக்க முடியாத பாஜகவுக்கு, பின்வாசலை திறந்துவிட வேண்டும் என்பதுதான், பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட்! அதனால்தான் சொல்கிறேன் நடக்கும் தேர்தல், தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்று அழுத்தமாக அனைத்து இடங்களிலும் கேட்கிறேன்.

டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு, டெல்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டில் ஆளக் கூடாது. தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் ஆணவ பாஜகவும், அடிமை அதிமுகவும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT