சென்னை: முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு நாளும் மக்களுக்காகவே வாழ்கிறேன். தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் அரசு அமையும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2021-ல் திமுக 6-வது முறையாக ஆட்சிக்கு வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அதேநேரத்தில் கவலையாகவும் இருந்தது. அதிமுக விட்டுச் சென்ற மோசமான நிதிநிலை மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்பின்மை ஆகிய 2 நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது கவலை அளித்தது.
சிக்கலில் இருந்த தமிழகத்தை தற்போது தலைநிமிரச் செய்துள்ளோம். எனது முதல் கையெழுத்து மகளிர் இலவசப் பேருந்து பயணத் திட்டம்தான். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.31 கோடி பெண்களுக்கு தலா ரூ.29,000 வழங்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டத்தால் 20 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர். நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையான, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளோம். ஏறத்தாழ 2 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48 திட்டத்தில் சாலை விபத்துக்கு உள்ளான 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரூ.483 கோடி காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.6,045 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நான் முதல்வராகப் பொறுப்பேற்று 1,724 நாட்கள் ஆகியுள்ளன. மொத்தம் 8,685 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். 15,117 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டுள்ளேன். மாவட்ட அளவில் நடந்த 71 அரசு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்று, 44.44 லட்சம் பேருக்கு நலத்திட்டஉதவிகளை வழங்கியுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் மக்களுக்காகவே வாழ்ந்துள்ளேன். இந்த உண்மையை எதிர்க்கட்சிகளால் தாங்க முடியவில்லை.
தமிழக நலனுக்காக செயல்பட வேண்டிய ஆளுநர், பேரவைமரபுகளை மீறி, உரையை வாசிக்காமல் வெளியேறியது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால். எங்களுக்கு யாரும் தேசபக்தி குறித்து பாடம் எடுக்க வேண்டியதில்லை. அரசியல் சாசனத்தைப் பழிப்பவர்கள்தான் தேச விரோதிகள். மத்திய அரசு புள்ளிவிவரங்களின்படி, தமிழகம் 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.
இந்தியாவின் வறுமை விகிதம் 11.2 சதவீதமாகும். தமிழகத்தில் அது வெறும் 1.43 சதவீதம் மட்டுமே. இதை மத்திய அரசின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. எனவே, இதுகுறித்து ஆளுநர் கேள்வி கேட்க வேண்டுமென்றால், அவரை இங்கே அனுப்பி வைத்த மத்திய அரசைத்தான் கேட்க வேண்டும்.
ஏற்றுமதி, ஸ்டார்ட்-அப் தரவரிசை மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மத்திய அரசிடமிருந்து கடந்த 5 ஆண்டுகளில் 65-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளோம். கடந்த 5 ஆண்டுகால உழைப்பைப் பார்த்து மக்கள் மீண்டும் திமுக ஆட்சியை கொண்டுவரத் தீர்மானித்துவிட்டார்கள். எங்களின் சாதனைகளை நாங்களே மிஞ்சும் வகையில் ‘திராவிட மாடல் 2.0’ அமையும். நாங்களே மீண்டும் வெல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.