தமிழகம்

“மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவோம்​” - முதல்வர் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேர​வை​யின் நிறைவு நாள் கூட்​டத்​தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘மீண்​டும் வந்து ஆட்சி அமைப்​போம். தமிழக மக்​களுக்​கான திட்​டங்​களை தொடர்ந்து செயல்​படுத்​து​வோம்’’ என்று நம்​பிக்​கை​யுடன் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் 2026-27 பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நேற்று நிறைவடைந்​தது. இது நடப்பு 16-வது சட்​டப்​பேர​வை​யின் கடைசி நாள் கூட்​ட​ம் ஆகும். இதில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: கடந்த 5 ஆண்டு காலத்​தில் 5 பட்​ஜெட்​கள் அளிக்​கப்​பட்​டுள்​ளன. அமைச்​சர்​கள் எம்​ஆர்​கே. பன்​னீர்​செல்​வம், தங்​கம் தென்​னரசு ஆகியோர் சிறப்​பான பட்​ஜெட், பதி​லுரை வழங்​கி​யுள்​ளனர்.

          

இதன் தொடர்ச்​சி​யை, அடுத்த 2 மாதத்​தில் மீண்​டும் வந்​து, நிச்​ச​யம், இன்​னும் கூடு​தலாக, வேக​மாக தொடர்​வோம். 5 ஆண்டு அனுபவத்​தால் இந்த முத்​து​வேல் கருணாநிதி ஸ்டா​லின் இன்​னும் வலிமை பெற்​றுள்​ளேன். தமிழகத்தை இன்​னும் ஏற்​றம் பெற வைக்க நம்​பிக்​கையோடு உழைக்க வேண்​டும் எனும் ஊக்​கம், வல்​லமை​யும் பெற்​றுள்​ளேன்.

தமிழகத்​தில் உள்ள 234 தொகு​தி​களை​யும் எனது தொகு​தி​யாகவே நினைத்​து, எங்​களுக்கு வாக்​களித்​தவர்​கள், வாக்​களிக்​காதவர்​கள் என்று பிரித்​துப் பார்க்​காமல் செய​லாற்றி உள்​ளேன். இந்த மிகப் பெரிய வாய்ப்​பைத் தந்த தமிழக மக்​கள், என்​னைத் தேர்ந்​தெடுத்து பேர​வைக்கு அனுப்​பிய கொளத்​தூர் தொகுதி மக்​களுக்கு மனமார்ந்த நன்​றி.

கடந்த 2021-ல் பேரவை நூற்​றாண்டு விழாவுக்கு வந்​து, முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் படத்தை திறந்து வைத்த அன்​றைய குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்​துக்கு நன்​றி. ஆளுநருக்​கும், எனக்​கும் தனிப்​பட்ட முறை​யில் எந்​த​வித கருத்து வேறு​பாடும் கிடை​யாது. தமிழர்​களின் சுயமரி​யாதை எள் முனையளவு சீண்​டப்​பட்​டாலும், அது யாராக இருந்​தா​லும், எதிர்க்​குரல் கொடுக்​கும் திசை​யில் முதல் நபராக இருப்​பேன். தமிழர் பண்​பாட்டை மனதில் கொண்​டு, ஆளுநருக்​கும் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

கடந்த 5 ஆண்​டு​களாக அமை​தி, கண்​ணி​யம், கட்​டுப்​பாட்​டோடு பேர​வையை சிறப்​பாக நடத்​திய பேர​வைத்தலை​வருக்கு பாராட்​டு​கள், வாழ்த்​துகள். பேர​வை​யில் அனல் பறக்​கும் விவாதம் நடை​பெறும் சூழலில் தனது அனுபவத்​தா​லும், அபார நினை​வாற்​றலாலும் அமை​திப்​படுத்​தக்​கூடிய அவை முன்​னவர் துரை​முரு​கன் விரைந்து உடல்​நலம் பெற்று வரவேண்​டும். அவருக்​கும் எனது நன்​றிகள்.

மக்​கள் பணி​யிலும், தேர்​தல் பணி​யிலும் என்​னில் ஒரு பாதி​யாய், இயக்​கத்​தின் வளர்ச்​சிக்​கும், ஆட்​சி​யின் சிறப்​புக்​கும் உறு​துணை​யாக நிற்​கும் துணை முதல்​வருக்​கும் பாராட்​டு​கள், நன்​றிகள். அரசின் திட்​டங்​கள் சிந்​தாமல் சிதறாமல் மக்​களிடம் சென்​றடைய முழு ஒத்​துழைப்பு நல்​கிய அனைத்து அமைச்​சர்​கள், தலை​மைச் செயலர், அனைத்து துறைகளின் செயலர்​கள், காவல் துறை​யினர் அனை​வருக்​கும் நன்​றி.

குறை​களைச் சொல்​பவர்​கள் நம் முன்​னேற்​றத்​துக்கு சிறகு​களைத் தருபவர்​கள். அந்த வகை​யில், அரசுக்கு தக்க யோசனை​கள் கூறு​வ​தி​லும், குறை​களைச் சுட்​டிக்​காட்​டு​வ​தி​லும், கண்​ணி​ய​மான முறையை கடைபிடித்​து, ஒத்​துழைப்பு நல்​கிய எதிர்க்​கட்​சித் தலை​வருக்​கும், இதர கட்​சித் தலை​வர்​களுக்​கும், எங்​கள் சாதனை​களுக்​கெல்​லாம் தோளோடு தோள் நின்ற தோழமைக் கட்​சித் தலை​வர்​களுக்​கும் நன்​றி.

இந்த 5 ஆண்​டு​களில் எனக்​கும், என் மனசாட்​சிக்​கும் மட்​டுமே கட்​டுப்​பட்டு உழைத்​துள்​ளேன். இன்​னும் உழைக்​கக் காத்​திருக்​கிறேன். நாளை நாங்​கள் அமைக்​கும் திரா​விட மாடல் 2.0 ஆட்​சி, எங்​கள் சாதனை​களை நாங்​களே விஞ்​சும் அளவுக்கு இருக்​கும். மீண்​டும் வந்து ஆட்சி அமைப்​போம். தமிழக மக்​களுக்​கான திட்​டங்​களை தொடர்ந்​து செயல்​படுத்​து​வோம்​. இவ்​வாறு முதல்​வர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT