தமிழகம்

பாஜகவுக்கு முதுகை வாடகைக்கு விட்டுள்ளார் பழனிசாமி: தருமபுரி பிரச்சாரத்தில் ஸ்டாலின் தாக்கு

செய்திப்பிரிவு

“தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலாவது தமிழகத்துக்கு துரோகியாக இல்லாமல் சுய மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள் பழனிசாமி. பாஜக-வுக்கு தன் முதுகை வாடகைக்கு விட்டுள்ளார் பழனிசாமி” என தருமபுரி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தருமபுரி மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் டி.என்.வி.செந்தில்குமார் (திமுக), ஜி.கே.எம்.தமிழ்குமரன் (காங்கிரஸ்) இளங்கோவன் (தேமுதிக), பழனியப்பன் (திமுக), சண்முகம் (திமுக) ஆகியோருக்கு ஆதரவு திரட்டும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் தருமபுரியை அடுத்த தடங்கம் பகுதியில் நேற்று மாலை நடந்தது.

          

இந்தக் கூட்டத்தில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வரலாற்று சிறப்புமிக்க பல திட்டங்களை திமுக அரசு இந்த தருமபுரி மண்ணில் இருந்து தான் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. எனவே, தருமபுரி என்றாலே எனக்கு மிகவும் பிடித்த ஊர். தமிழகத்துக்கு துரோகம் செய்யும் கூட்டத்தை விரட்ட வேண்டும் எனக் கேட்டு வந்திருக்கிறேன். தமிழகத்துக்கு எதிரான துரோகத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். தருமபுரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தந்தவன் என்ற உரிமையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் உங்களை தேடி வந்துள்ளேன்.

இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசு போடும் ரோடில் வருமாறு நாம் அழைப்பது பாஜக-வுக்கு பிடிக்கவில்லை. பாஜக முன்வைக்கும் ஆட்சி யாரோ சிலருக்கானது, ஆனால் திராவிட மாடல் ஆட்சி, எல்லோருக்கும் சமமானது‌. 2021-ல் வெற்றிபெற்று இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சியை நடத்தியுள்ளோம்.

இதுபோன்ற சாதனைகளை நாம் கூறுகிறோம். ஆனால், இவ்வாறு குறிப்பிட்டுக் கூற பழனிசாமியிடம் ஏதாவது சாதனை உண்டா? தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுப்பதை தனது வாழ்நாள் பெருமையாக அவர் நினைக்கிறார். இந்தியாவுக்கு தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தற்போது பேராபத்து வந்துள்ளது. இதன் மூலம் நம் மாநில எம்பி-க்களின் எண்ணிக்கை குறைந்து நாடாளுமன்றத்தில் நமது குரலின் வலிமை குறையும். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியை எதிர்த்து நாளை (இன்று) வீடுகள்தோறும் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்த இருக்கிறோம். அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

அவர்களை எதிர்த்து சண்டையிட நான் ரெடி. நீங்களும் துணைக்கு வருவீர்களா? இந்த விவகாரத்திலாவது தமிழகத்துக்கு துரோகியாக இல்லாமல் சுய மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள் பழனிசாமி. பாஜக-வுக்கு தன் முதுகை வாடகைக்கு விட்டுள்ளார் பழனிசாமி. அந்தக் கூட்டணியில் இன்னொருவர் இருக்கிறார். அவரைப் பற்றி அவரது தந்தையே ‘அசிங்கம்’ என்று குறிப்பிட்டுவிட்ட நிலையில் நானும் அவரைப்பற்றி பேசி என் தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.

மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நாம் பேசுவதாக பழனிசாமி கூறுகிறார். மகளிருக்கு சொத்துரிமை, சுய உதவிக் குழு திட்டம், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், தோழி விடுதி போன்ற மகளிருக்கான எண்ணற்ற திட்டங்கள் வழங்கிய திமுக-வைப் பார்த்தா இப்படி கூறுகிறீர்கள்? நமது கூட்டணியில் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாராக உள்ளது. தமிழகத்தை பல்வேறு திட்டங்களுடன் வளர்ச்சிப் பாதையை நோக்கி நாம் அழைத்துச் செல்கிறோம். ஆனால், தெற்கை தேய்க்கப் பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் தரும் பதிலடியை அவர்கள் வரலாற்றில் மறக்கவே கூடாது. 20/20 மேட்சில் இறுதி 5 ஓவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுபோல, மீதமிருக்கும் நாட்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி நம் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT