‘‘திமுக பெண்கள் பவர் இன்ஜின் முன் அதிமுக-வின் டப்பா இன்ஜின் தாக்குப் பிடிக்காது’’ என எதிர்க் கட்சித்தலைவர் பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: திராவிட மாடல் அரசின் ரூ.5 ஆயிரம் உரிமைத் தொகையை முதலில் கொச்சைப்படுத்தினார்கள். அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள். அதிமுக-வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5 ஆயிரத்தை உரிமைத் தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்.
உங்கள் அழுத்தம் காரணமல்ல. உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத் தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம். இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன். பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய ஹிட் அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன்.
காப்பி, பேஸ்ட் அரசியல் என்பது காலங்காலமாக அதிமுக-வின் வாடிக்கை என்பதைத் தமிழகத்தில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க. விடியல் பயணம், புதுமைப் பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என திமுக அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் திமுக பெண்கள் பவர் இன்ஜின் முன் உங்களின் டப்பா இன்ஜின் தாக்குப் பிடிக்காது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.