“மோடியின் வருகை திமுக இல்லாத தமிழகத்துக்கு முன்னுரை எழுதும்” - தமிழக பாஜக உறுதி
பிரதமர் மோடியின் மதுரை வருகை திமுக இல்லாத தமிழகத்துக்கு முன்னுரை எழுதும் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உலகம் பார்த்திராத ஊழல் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஊழல் அமைச்சர் நேருவை முதல்வர் ஸ்டாலின் பாதுகாக்கிறார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அறநிலைய துறையின் கோயில் கும்பாபிஷேகங்களிலும் திமுக அரசு ஊழல் முத்திரை பதித்து விட்டது.
4,332 கோயில்களில் மக்கள் பணத்தில், இந்து சமுதாய மக்கள் அளித்த ஆன்மிக நன்கொடையில் கும்பாபிஷேகம் நடத்திய அரசு, வெட்கப்படாமல் ஊழலும் செய்துவிட்டு பெருமையும் பட்டுக் கொள்கிறது. திருப்பரங்குன்றம் கோயிலில், புனித கார்த்திகை தீபத்தை ஏற்ற விடாமல் தடுத்து மகா பாதகச் செயலை செய்த திமுக அரசு, தமிழகத்தில் ஆளும் தகுதியை இழந்துவிட்டது.
ரூ.5 ஆயிரம் கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கலாம் என்ற திமுக-வின் திட்டத்தை தமிழகப் பெண்கள் முறியடிப்பார்கள். ஓட்டுக்கு ஒரு லட்சம், வீட்டுக்கு 5 லட்சம் கொடுத்தாலும் வாக்களிக்க மாட்டோம் என்று, தமிழகப் பெண்கள் உறுதியுடன் திமுக-வை வீழ்த்த கடவுளின் முன் சத்தியம் செய்துவிட்டார்கள்.
பிரதமர் மோடி - பழனிசாமி இருவரின் டபுள் இன்ஜின் ஆட்சி, திமுக இல்லாத தமிழகத்தை உருவாக்கும். திமுக ஆட்சியின் வீழ்ச்சிப் பயணத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களை எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக, வெற்றிகரமான குடிமக்களாக மாற்றும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
