தமிழகம்

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நூலகம் - அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

மோகன் கணபதி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் காயிதே மில்லத் பெயரில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட நூலகம் அமைய இருப்பதாகவும், அதற்கான அடிக்கலை இன்றைக்கு நாட்டியிருப்பதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரை:

நெல்லையின் அடையாளமாக விளங்குகிறது நெல்லையப்பர் கோயில். ஏழாம் நூற்றாண்டில், நின்றுசீர் நெடுமாறப் பாண்டியரால் கட்டப்பட்ட இந்த கோயிலை 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து திருப்பணிகளை செய்தவர் கருணாநிதி. நெல்லையப்பர் கோயிலின் வெள்ளித் தேர் 1991-ல் தீ விபத்தில் எரிந்து போனது. கடந்த பிப்ரவரி மாதம், நான் இதே நெல்லைக்கு வந்தபோது மீண்டும் அந்த வெள்ளித் தேர் ஓடும் என்று அறிவித்தேன். மகிழ்ச்சியோடு சொல்கிறேன், இப்போது அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இன்னும் சில நாட்களில், அதாவது ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து அந்த வெள்ளித் தேர் ஓடும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழர்களான நம்முடைய பண்பாடு தனித்துவமானது, முற்போக்கானது! இந்தியத் துணைக்கண்டத்தின் நாகரிகத்தின் தொட்டிலாகவும், உச்சமாகவும் இருந்தது, நம்முடைய தமிழ்நிலம்தான்! அதற்கு பல இலக்கியச் சான்றுகள் இருக்கிறது! ஆனால், இலக்கியம் மட்டுமே ஒருபோதும் வரலாற்று சான்றாகாது! எனவே, அதை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கவும், தொல்லியல் சான்றுகளை சேகரிக்கவும் நாம் மேற்கொள்ளும் காலப் பயணம்தான் அகழாய்வுகள்!

13 ஏக்கர் நிலப்பரப்பில், 54 ஆயிரத்து 296 சதுர அடி பரப்பளவில், பொருநை அருங்காட்சி அரங்கத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன்! உங்களை எல்லாம் நான் கேட்க விரும்புவது, நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்று, இந்த அருங்காட்சியகங்களை பார்க்க வேண்டும்!

இந்த நேரத்தில், மற்றொரு விஷயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு அறிவிப்பு வந்தது. அந்தப் பணிகள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது? இன்னும் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கவில்லை.

ஆனால், நாம் ஆட்சிக்குப் பொறுப்பிற்கு வந்த பிறகு தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், சிவகலை உள்ளிட் அகழாய்வுகளை மேற்கொண்டு இப்போது உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவிற்கு பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறோம். அதனால், இந்த நேரத்தில் பிரதமர் மோடியையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் தமிழ்நாட்டில் கட்டியிருக்கக்கூடிய கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்து பார்க்கவேண்டும் என்று இந்த கூட்டத்தின் மூலமாக, நான் அன்போடு அவர்களை அழைக்கிறேன். நீங்கள் வந்து பார்த்தால்தான் தமிழினுடைய நாகரிகம் எந்த அளவுக்கு தொன்மை கொண்டிருக்கிறது என்பது தெரியும்.

இன்றைய தினம் 235 கோடியே 94 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 33 முடிவுற்ற பணிகளை நெல்லை மாவட்ட மக்களுக்காக நான் திறந்து வைத்திருக்கிறேன்! அதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், நெல்லை பன்னோக்கு மருத்துவமனையில், இதயம், நரம்பு, சீறுநீரகம், கல்லீரல் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்க தேவையான அனைத்து நவீன கட்டமைப்புகளையும் கொண்ட மருத்துவமனை கட்டடம் முக்கியமாக இருக்கிறது!

தமிழ்ப் பெருமைக்கு பொருநை மியூசியம்! மக்கள் உயிர்காக்க மருத்துவமனை! “அப்போது நெல்லை மக்களுக்கு அறிவுப் பசிக்கு என்ன?” என்று கேட்கிறீர்களா! சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கோவையில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம், திருச்சியில் பெருந்தலைவர் காமராசர் நூலகம் எனும் வரிசையில், நெல்லையில் காயிதே மில்லத் பெயரில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்ட நூலகம் அமைய இருக்கிறது. அதற்கான அடிக்கலை இன்றைக்கு நாட்டியிருக்கிறேன்.

நெல்லையின் அடையாளமாக நெல்லையப்பர் கோயில், திருவள்ளுவர் இரட்டைப் பாலம், தாமிரபரணி - இந்த வரிசையில் இனி, பொருநை அருங்காட்சியகமும், மாபெரும் அறிவுத் திருக்கோயிலாக அமையப் போகின்ற காயேதே மில்லத் நூலகமும் இருக்கும்! நெல்லைக்கு மட்டுமல்ல, அருகாமையில் இருக்கக்கூடிய தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் இதனால் பெரிய அளவில் பயனடைவார்கள்!

மொத்தம் 356 கோடியே 59 இலட்சம் ரூபாய் மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். 45 ஆயிரத்து 477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 இலட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி இருக்கிறேன்.

16 ஆண்டுகளுக்கு முன்பே, அப்போதைய முதல்வர் கருணாநிதி, தாமிரபரணி ஆற்றின் வெள்ள உபரி நீரை வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்ல, 369 கோடி ரூபாய் ஒதுக்கி தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு வெள்ள உபரி நீர்த் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

2021-ல் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் இதற்காக தனியாக அலுவலர்களை நியமித்து விரைந்து முடிக்க நான் உத்தரவிட்டேன்! தமிழ்நாட்டின் முதல் நதிநீர் இணைப்புத் திட்டமாக, வெற்றிகரமாக இது முடிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது!. இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில், 14 ஆயிரத்து 85 ஹெக்டேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 955 ஹெக்டேரும் என்று மொத்தம், 23 ஆயிரத்து 40 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. அதேபோல், பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம், திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கின்ற வறண்ட பகுதிகளில், இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது, வேளாண்மைப் பணிகள் பெருகியிருக்கிறது!

நெல்லைக்கான சில அறிவிப்புகளை தற்போது வெளியிடுகிறேன். முதல் அறிவிப்பு – திருநெல்வேலி மாநகர், காந்திநகரில் அமைந்திருக்கக்கூடிய ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில், 16 கோடி ரூபாய் செலவில், அனைத்து வசதிகளுடன் புதிய மகளிர் தங்கும் விடுதி அமைக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு – சேரன்மாதேவி வட்டம் முக்கூடல், பாப்பாக்குடி கிராம விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில், காங்கேயன் கால்வாய் மற்றும் வெள்ளோடையை மேம்படுத்தும் பணிகள் 4 கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

மூன்றாவது அறிவிப்பு – நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 5 கோடி ரூபாய் செலவில், வள்ளியூர் பெரிய குளம் மற்றும் வள்ளியூரான் கால்வாய் ஆகியவை புனரமைக்கப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படி மக்களுக்குத் தேவையானதை பார்த்துப் பார்த்து செய்து வழங்குகின்ற மக்களாட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு அப்படியே நேர்மாறாக, மக்கள் விரோத ஆட்சியை ஒன்றிய அரசு இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய கிராமப்புறங்களின் உயிர்நாடியாக இருந்து, பல கோடி ஏழை மக்களின் வறுமையை போக்கிய மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தை இப்போது, பா.ஜ.க. அரசு திட்டமிட்டு முடக்கியிருக்கிறார்கள்.

மகாத்மா காந்தியடிகள் பெயரையே நீக்கி, பெரும்பாலான இந்திய மக்களுக்கு புரியாத இந்திப் பெயரை வைத்திருக்கிறார்கள். காந்தியின் பெயரை நீக்கியது மட்டுமல்ல, 100 நாள் வேலை திட்டத்தின் உண்மையான நோக்கத்தையே காலி செய்துவிட்டார்கள் – அழித்துவிட்டார்கள் - அழிக்கிறார்கள்.

இந்த நிலையில், வருகின்ற 24-ஆம் தேதி நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தியதற்கு எதிராக, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில், தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசிற்கு எதிராக நாம் ஒரு மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டும் என்று அறிவித்திருக்கிறோம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இதுவரை 1 கோடியே 13 இலட்சம் சகோதரிகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தோம். இந்த மாதத்தில் இருந்து கூடுதலாக 16 இலட்சம் பேருக்கு அதிகமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT