சென்னை: காவல், விளையாட்டு, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.2,974.93 கோடி மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் துறை சார்பில் ரூ.75.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 200 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், 8 காவல் துறை இதர கட்டிடங்கள், ரூ.15 கோடி செலவில் 22 காவல் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அத்துடன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் 2,138 அடுக்குமாடி குடியிருப்புகளை காவல்துறைக்கு வழங்கினார்.
தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.42.94 கோடியில் கட்டப்பட்ட14 விளையாட்டுத் துறை கட்டிடங்களைத் திறந்துவைத்து, ரூ.37.84 கோடி மதிப்பிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.1,404.27 கோடி செலவில் 6 முடிவுற்ற பணிகள், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.529.54 கோடியில் 16 முடிவுற்ற பணிகள், நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் ரூ.349.76 கோடியில் முடிவுற்ற 93 பணிகள், பேரூராட்சிகள் இயக்குநரகம் சார்பில் ரூ.389.93 கோடியில் 76 முடிவற்ற பணிகள், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.59.27 கோடியில் 38 பணிகள் என ரூ.2,732.77 கோடி மதிப்பிலான 227 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் திறந்து வைத்தார்.
இதுதவிர, சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.27.59 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ரூ.495.29 கோடியிலான 2 திட்டப்பணிகள், நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் ரூ.132.48 கோடியிலான 8 புதிய திட்டப்பணிகள் என ரூ.655.36 கோடியிலான 19 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கிண்டி பூங்கா அடிக்கல்: வேளாண் துறை சார்பில் சென்னை கிண்டியில் சுற்றுச்சூழல் பூங்காவை பெரியவர்கள், குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், கருத்தியல் தோட்டங்கள், குழந்தைகள் விளையாடும் திடல்கள், பறவைத் திட்டுகள், நீரியல் தோட்டம், புல்வெளிகள், காட்சி மேடைகள், நிழல் நடைபாதைகள் போன்ற கட்டமைப்புகளுடன் ரூ.37.85 கோடியில் அமைக்கப்படும் பூங்காவுக்கான முதல்கட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அத்துடன், சென்னை கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவில் நாட்டிலேயே முதல்முறையாக ரூ.11.84 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 30 மீட்டர் உயர செங்குத்துத் தோட்டத்துடன், 9 அடுக்குகளைக் கொண்ட உலகத்தரத்திலான ‘உயர் கோபுர மரத்தை’ திறந்துவைத்தார்.
அத்துடன், தமிழகத்தில் வனங்கள் மற்றும் மரங்களால் சூழப்பட்டுள்ள பரப்பை 33 சதவீதமாக மாற்றும் குறிக்கோளை அடையும் வகையில் ’தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை 2026’-ஐ வெளியிட்டார்.
இதுதவிர, சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.63 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ‘முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தை’ திறந்து வைத்தார். மேலும், ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
வருவாய்த்துறை சார்பில் ரூ.7.65 கோடியில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ரூ.4.54 கோடியில் கட்டப்பட்ட ஒரு வட்டாட்சியர் அலுவலகம், ரூ.40.73 லட்சத்தில் கட்டப்பட்ட வட்டாட்சியர் குடியிருப்பு மற்றும் ரூ.3.60 கோடியில் கட்டப்பட்ட 10 வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு கட்டிடங்களையும் திறந்துவைத்தார்.
மேலும், சமூக நலத்துறை சார்பில் சிவகங்கை மற்றும் தேனியில் ரூ.10.38 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘தோழி’ விடுதி கட்டிடங்கள், தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.7 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வுகளில், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.