சென்னை: சமூக நீதியை நிலைநாட்ட தமிழக முதல்வருக்கு மனம் இல்லை என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் சென்னையில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியதாவது: தமிழகத்தில் சமூக நீதியை திமுக குழிதோண்டி புதைத்துள்ளது. கடந்த 36 ஆண்டு காலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாமக கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக நீதி பிரச்சினை. ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற நோக்கில் தான் அந்த சாதிகள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளத்தான் கணக்கெடுப்பு நடத்தக் கோருகிறோம். இது தெரிந்தால் தான் சமூகநீதியை நிலைநாட்ட முடியும்.
கடந்த 5 ஆண்டுகளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போராட்டம், அறிக்கை, தீர்மானம், முதல்வருடன் சந்திப்பு என 35 முறை பாமக வலியுறுத்தியுள்ளது. தமிழகம் 50 ஆண்டுகளில் முன்னேறும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் 20 ஆண்டுகளில் அந்த நிலையை எட்டிவிடும். அனைத்து சமூகங்களும் முன்னேறினால்தான் நிலையான வளர்ச்சி இருக்கும்.
தமிழகத்தில் உள்ள கால்நடைகள், தெருநாய்கள் என அனைத்துக்கும் கணக்கு வைத்துள்ளார்கள். ஆனால் தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுயமரியாதை வாழ்கைக்காக கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறார்கள். திமுக அரசிடம் அதிகாரிகள், நிதி என அனைத்தும் உள்ளது ஆனால் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற மனம் முதல்வருக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக, தவெக புறக்கணிப்பு: இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதேபோல அதிமுக, தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
பெரும்பாலான கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற நிலையில் அதிமுக, தவெகவில் இருந்து யாரும் வரவில்லை. அதேநேரம் பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமாகா துணை தலைவர் இ.எஸ்.எஸ்.ராமன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் களஞ்சியம், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.